Tuesday, December 14, 2010

ஜப்பானின் ஜனனம்..!

 

கடல் கடந்து,
காற்றைக் கிழித்தும்
காணவரும் மக்கள்
நெஞ்சினைக்
கைத்தட்டவைத்த
ஜப்பானே..
உன் வளர்ச்சிக்கு
தலை வணங்குகிறேன்.....!

உன்னைப் பெற்றெடுத்து

பெயர் சூட்டிய தாய்
யார் என்பதைக் கூறு,
நானும் சோதனைக்குழாய்
மூலம் ஒரு சாதனை
இந்தியாவை
உருவாக்க விழைகிறேன்....

இரண்டாம் உலகப்போர்

உன் சாதனைக்கு
வித்திட்ட சோதனை
விதை என்பேன்.......

அன்று ,

அமெரிக்கர்கள் போட்ட
அணுகுண்டால் உன் நாடு
சிதைவுண்டது.......

அக்குண்டு ,

ஆக்சிஜனைக்கூட
உன் நாட்டிற்குள்
அனுமதிக்க மறுத்ததாம் ,
ஆப்ரிக்கரை, அமெரிக்கர்கள்
வாட்டியதைப்போல .......

புல்பூண்டு கூட

புதிதாய்த் தோன்ற
அஞ்சியது...
பிறந்தவுடன்
இறந்துவிடுவோமோ
என்ற பயத்தில்......

ஆயரம் சன்னல்கள்

திறந்திருந்தும்
அலுப்பின்றி
அடிக்கும்
வெப்பக்காற்றால்,
உன் நாட்டின்
இயற்கை எழிலுடன்
உன் நாட்டினர்
மூக்குமா தேய்ந்து
போனது???

உன் உடல் வாகு குன்றினும்,

உள்ள வாகு குன்றாமல்
நிலைநாட்டுகின்றது,
உன் புகழை......

அகிலமே அண்ணார்ந்து

பார்க்கும் அதிசயங்களை
அளிக்கிறாய் ....

உன் நாட்டின் மைந்தர்கள்

அனைவரும் கண்டுபிடிப்பின்
கலையாத கருவூலங்கள்.....

உன் நாட்டின் ஓரத்தில்

முளையாத நாற்று
உன் மனதின்
வீரத்தில் முளைந்து
நிற்கிறது......

விரைவில் விவசாயத்தை

துவங்கு...
இந்த அகிலமே
காத்திருக்கின்றது....
உன் திறமையை
அறுவடை செய்ய .........!!!

Sunday, December 12, 2010

எங்கள் கூடு..

 
 
அடுக்குப் படுக்கையைக் கொண்ட
அடுக்கு மாடிக் கட்டிடங்களில்
வாழும் சிறுவண்டுகள்!

மூட்டைப் பூச்சியும்;
முகச் சுளிப்பும்;
வந்துப்போகும் எங்கள்
வசந்த மாளிகைக்கு!

படித்தவரும்;படிக்காதவரும்;
படுப்பதால்;
சமச்சீர் கொள்கைகள்
சாரல் வீசும்!
 
சமைப்பதும்;குளிப்பதும்;
அட்டவணையில் தொங்க;
ஊர்ச் சாமான்கள்
படுக்கைக்குக் கீழே
பதுங்கிக்கிடக்க;
காலணிகள் ஒரத்தில்
ஒதுங்கிக் கிடக்க;
கனமான இதயத்துடன்
கவனமாக உழைக்க
வந்தத் தேசத்தில்;
நாங்கள் ஓய்வெடுக்கும் இடம்!

Friday, November 19, 2010

அன்பிற்கு உயிர் கொடுத்தவளே!!!...


*
எத்தனை கடவுளிடம்
எனக்காக வேண்டியிருப்பாய்!
எத்தனை மணித்துளிகள்
எனக்காக காத்திருந்தாய்!
எத்தனை இரவுகள்
என் வரவுக்காக விழித்திருந்தாய்!
எத்தனை ஆண்டுகள்
இரவில் விழிக்காமல் நானிருக்க
விழித்து கொண்டு நீ இருந்தாய்!
*
கருவறையில் இருக்கும்
கல்லைவிட,கள்ளகபடமில்லாத,
கருவறையில் சுமந்தவளே,
கடவுள் என்பதை நீ உணர்த்தினாய்!
*
என் வலிக்காக நான் அழுதேன்.
வளர்த்தவளுக்காக நான் அழுததில்லை...
காரணம் தெரியாமல் என்னோடு நீ அழுதாய்!
*
இதயத்தை உதைத்தவளுக்காக
வலியால் நான் அழுதேன்...
காரணம் ஏதும் கேட்காமல் அப்போதும்
என்னுடன் நீ அழுதாய்!
*
அன்பு ஒன்றே உலகில்
சிறந்தது என்பதை தெரியவைத்தாய்!
அன்புதான் அழுகையாக
வெளிப்படுகின்றது என்பதை புரியவைத்தாய்!
அன்பே அன்னை!அன்புதான் உலகம்
என்பதை உணர்த்தினாய்!
*
கருவறையில் இருந்தபோது
கரு என்று பாராமல்,
உன் உயிரை பற்றி நினைக்காமல்
கருவிற்கு ஓர் உயிர் கொடுத்தாய்!
*
மழலையாக தவழ்ந்தபோது
இரத்தம் என பாராமல்,
என் கண்ணீரை துடைக்க
இரத்தத்தை பாலாக மாற்றி,
எனை மகிழச்செயதாய்!
*
மனிதனாக வளர்ந்தபோது
சோகம் தெரியாமல் நான் வாழ,
சுகமாக நான் இருக்க,
நலமுடன் நான் வாழ,
எனக்காக என்று நான் இருந்தபோது
தனக்காக என்று நீ இல்லாமல்,
இரத்தத்தை உருக்கி
வியர்வை சிந்தினாய்!
*
அன்றும் எனக்காக
கண்ணீர் வடித்தாய்!
இன்றும் எனக்காக
கண்ணீர் வடிக்கின்றாய்!
*
இதுவரை செய்த தவறுகளுக்காக
தலை வணங்குகின்றேன்!
வாழ்க்கையை தொலைக்க
நான் விரும்பவில்லை...
இதோ!கடவுளாக
உனை வணங்குகின்றேன்!
*
கடல் தாண்டி
பயணம் செய்ய விருப்பமில்லை.
நீயே!எந்தன்
அசையா சொத்தாக இருக்கும்போது!
காற்றை
சுவாசிக்க விருப்பமில்லை...
நீயே!எந்தன்
மூச்சாக இருக்கும்போது!
ஒலியினை கூட
கேட்க விருப்பமில்லை....
நீயே!எந்தன்
செவியாக இருக்கும்போது!
*
அத்தனையும்,
இத்தனையும்,
இத்தனை நாட்கள்
நான் இழந்ததுபோதும்...
இனி,அன்பை மட்டும் என்றும்
நான் இழக்க விரும்பவில்லை...
*
தாயே!உனையே!
என் இதயத்தில் நேசிக்கிறேன்!
உன்னை மட்டுமே
உயிரின் மூச்சாக சுவாசிக்கிறேன்!
*
இனி,எனக்கு
ஒரு பிறப்பு என்றால்,
அது உன் கருவறையாக
மட்டும்தான் இருக்க வேண்டும்.
எனக்கு இறப்பு என்றால்,
அதுவும் உன் மடியாக
மட்டுதான் இருக்க வேண்டும்....
*
இனி,உனக்கு
ஒரு பிறப்பு என்றால்,
எனக்கு மகளாக
மட்டும்தான் நீ பிறக்க வேண்டும்...
மகளாக பிறந்து,
தாயாக இருந்து,
எனை நீ
வளர்க்க வேண்டும்.....
*
கடவுள்
என்பவன்
ஒருவன் இருந்தால்,
இதனையேற்று
எனக்காக
செவி சாய்க்க வேண்டும்....
*
அன்பே கடவுள்!
அன்பை தரும்
அன்னை மட்டுமே கடவுள்!
தாயே!நீ வாழ்க!
அன்பிற்கு உயிர் கொடுத்தவளே!!!
பல்லாயிரகணக்காண்டுகள் நீ வாழ்க!
*

Monday, November 15, 2010

சொந்தங்களுடன்தானே கொண்டாடினீர்கள்!!!???


சிந்திய சோற்றுப் பருக்கைகளை
கொத்தும் புறாக்கள் வீட்டின் முன்
வருவதே இல்லை!

இலையுதிர் காலங்கள்

என்பது செய்தியாய்
கேட்டால்தான் தெரிகிறது!

மாலையை நினைவுப் படுத்தும்

மல்லிகை எல்லாம்
மாற்றான் தோட்டத்திலும் இல்லை!

அந்த ஜன்னல் ஓர

சாரல்களை எல்லாம்
கண்ணாடி போட்டு மூடிவிட்டனர்!

இப்பொழுதெல்லாம் செல்லப் பிராணிகள்

பிளாஸ்டிக் பொம்மைகள்
என்றாகிவிட்டது!

மரத்தடி சாமிகள் கூட

சாலையின் ஓரமாய்
நகர்ந்துவிட்டனர்!

குழந்தைகள் எல்லாம்

திடலுக்கு பதில்
வீடியோ கேமில் அமர்ந்துவிட்டனர்!

விறகு அடுப்பு ஊதியவர்கள் கூட

பஞ்சு வைத்து புகைக்க
ஆரம்பித்து விட்டனர்!

கொக்குகளும் நாரைகளும்

வட்டமிட ஆழ்குழாய்
கிணறுகளையாவது தேடுகின்றன!

அரிசி கோலங்கள்

சுண்ணாம்பாகி சாயப் பூச்சாகி
கட்டெறும்புகளாகிவிட்டன!

என்ன செய்வது

இந்த தின மழையில்
முளைக்கும் அபூர்வ காளான்களை!

இதைத்தானே செய்தீர்கள்???

இந்த தீபாவளியையாவது விட்டுப்போன
சொந்தங்களுடன்தானே கொண்டாடினீர்கள்!!!???

Friday, November 12, 2010

முதல் மடல்..



முத்தான என் பிள்ளை
முத்தமிட்டு அனுப்பியிருக்கும்
முதல் மடல்!

கெஞ்சிக் கூத்தாடும்
அவன் பிஞ்சி விரல்கள்;
கொஞ்சி விளையாடியக்
காகிதத்தைத்
தொட்டுப் பார்ப்பேன்;
கோலம் இட்டதைக்;
கண்டு ரசிப்பேன்!

அடித்தல் திருத்தலுடன்;
ஆங்காங்கேப் பிழைகள்;
அவன் அழித்து
எழுத முற்பட்டதெல்லாம்
அப்பட்டமாய் அப்படியே
என்னைப் போல!

பெருமைப் பொங்க;
உதடுகள் பிரிய;
ஓடிக் காட்டுவேன்;
நண்பர்களிடம்!

தனித்திருந்து நான்
வெளிநாட்டில்
சிந்திய வியர்வை;
பலனளிக்கிறது;
மடலில் பிரதிப்பலிக்கிறது!

அவன் கிறுக்கல்களை
இல்லை இல்லை
கவிதைகளைப் 
படிக்க முடியவில்லை;
என்றாலும்

Tuesday, November 9, 2010

என் கல்லூரி இருக்கையே!!!







அனுமதி பெறாமல் உன்மேல்
நான் அமரும்பொழுது என்னை
முதுகோடு சேர்த்து அனைத்துக் கொண்டாயே!

கொஞ்சம் கொஞ்சமாய்
எனக்கு பழகக் கற்றுத் தந்தாய்
பழகினேன், நண்பர்கள் என்றார்கள்!

கோபம் வரும் பொழுது
எனக்கு சிரிக்க கற்றுத் தந்தாய்
சிரிக்க வைத்தேன், ரசிகன் என்றார்கள்!

அவள் கண்களை காட்டி காட்டி
எனக்கு காதலிக்க கற்றுத் தந்தாய்
காதலித்தேன், கவி என்றார்கள்!

நானும் நண்பனும் நட்பு என்று
உறவாடி மகிழ்கையில் நீ
அண்டை இருக்கையுடன் தோள் சேர்த்து
வெற்றியில் தட்டிக்கொண்டாய்!

தலைவலியில் உன் மேல்
தலை சாய்க்கும் பொழுதெல்லாம்
என் தலைக் கோதி என்னை ஏற்றுக்கொண்டாய்!

முதல் மாணவனாய் மதிப்பெண்களை
சொன்ன பொழுது ஆனந்தமாயும்
தோல்வியில் சோகமாயும்
என் கண்ணீரை வாங்கி கொண்டாய்!

கோபத்தில் எத்தனை முறை
பேனா முனையால் உன்னை காயப்படுத்திருகிறேன் !

ஆத்திரத்தில் எத்தனை முறை
கீழே தள்ளி இருக்கிறேன்!

எத்தனை முறை எட்டி உதைதிருக்கிறேன்!

அத்தனையும் தாங்கிக் கொண்டு
இந்த நான்கு ஆண்டுகளையும்
என்னையும் தாங்கிக் கொண்ட உன்னை
இங்கேயே விட்டு செல்கிறேன்.

நான் உன்மேல் பழகிய கையெழுத்துகள்
மட்டும் போதும் என்று புதியவனை
ஏற்றுக் கொள்ளுமுன் ஒரு நிமிடம்
என் வேண்டுதலை கேள்,

ஆண்டுகள் கடந்து என் வெற்றிகள்
முழுவதும் உன் காலடியில் சமர்பிக்க
வரும்பொழுது மீண்டும் உன் கரம் விரித்து
அமர ஒரு இடம் தருவாயா நான்
அமர்ந்து எழுந்த என் கல்லூரி இருக்கையே!!!

கையேந்தி பவன்

 

அழுகி போன தக்காளி
அலசாத வெங்காயம்
சொத்தையான காய்கறி
சோற்றுக்கு மலிவான அரிசி
வடிகட்டாத உப்பு நீர்
வறுவலுக்கு பனங் கொட்டை எண்ணெய்
கள்ளச்சந்தை எரிவாயு
கழுவாத எச்சில் பாத்திரம்
ஈக்களுக்கு இன்பபுரி
இருட்டுக்கு இன்னொரு பூரி

பூச்சி மைதா ரொட்டிக்கு

புகை படிந்த தோசை கல்லில்
பருப்பில்லா சாம்பார்
பலவகையாய் கூட்டியே
புளித்துப்போன தயிரோடு
புளிக்காத ஊறுகாய்
வியர்வை சொட்டும் உழைப்பாளிக்கு
விளங்காத சுகாதாரம்
எட்டு ரூபாய் சாப்பாட்டில்
இதை விட வேறில்லை
மூட்டை தொக்கும் கணேசன்
மூன்று ரூபாய் பாக்கிக்கு
மதிய சாப்பாட்டை மறந்துதான்
மாடாய் உழைக்கிறான் நொந்துதான்

உயர்தர சைவ உணவில்

உழைக்கும் வர்க்கம் மலிவு விலையில்
கனவைத்தான் கண்டுவைக்க
காசில்லாமல் உண்டு வைக்க
ஒரு ஈ குளிரூட்டிய அறையில்
உட்கார்ந்து தின்கிறதாம்
ஏழைகளை பார்த்துதான்
இந்த கவிதையை படிக்கிறதாம்
எங்களைவிட மனிதனெல்லாம்
இலவசமாய் உண்பதில்லை
தப்பித்தவறி அடித்தால் கூட
தடுமாறும் மரணம் கூட
ஊழல் போன உளுத்தர்களின்
உயரும் கையை கண்டுதான்
பறந்து நான் செல்கின்றேன் - அவர்
பார்க்கும்போது வாயில் நுழைந்து
இன்னொரு ஏப்பம் விடுகின்றேன்
எமன் வந்தால் மட்டும் இறக்கின்றேன்

மோட்சத்தின் என் சாவை

முழித்திருந்து கண்டிடுங்கள்
கையேந்தி பவன் அருகில் எனக்கு
கல்லறையை கட்டிடுங்கள்

Tuesday, November 2, 2010

மாதச் சம்பளம்

 
 
 
உழைப்பிற்கு ஊதியமாய்
களைப்பிற்கு உற்சாகமாய்
மாதச்சம்பளம்;
வாங்கியதும் வீங்கிய
கடமைக்குத் தீனியாய்!

கட்டிப்பிடித்து ஒட்டிப் பார்த்தாலும்
ஒட்டாமல் ஒடும்
ஒட்டப்பந்தய சூரனாக!

மலறும் முகம்
மணிக்கணக்கிற்குத்
தாங்காது;
மணியும் என்
கணக்கிற்கேப் போகாது!

கர்ணம் போட்டு வண்ண
வண்ணமாய் கனவுகள்
கண்டாலும்;
தங்காது தங்கம்
விற்கும் விலைக்கு!

எப்போதாவது ஏறும் சம்பளம்;
ஒட்டிபிறந்த உடன்பிறப்பாய்
கூடவே என் தேவைகளும்!
ஆறுதலாய் பணம் அனுப்பிய
ரசீது மட்டும் என் கையில்!

Sunday, October 31, 2010

சிலந்தி வலையில் சிறைபட்ட சிங்கங்கள்

 

நாங்கள் யார்?
குழந்தைகளா ?
தொழிலாளர்களா?, இல்லை
குழந்தைத் தொழிலாளிகள்

நாங்கள்......

பூவாகாமலே
புதைக்கப்பட்ட
மொட்டுக்கள்

நாங்கள்......

துவக்கத்தையே
தொலைத்த
முடிவுகள்

நாங்கள்......

முகவுரையிலேயே
முடிவுரையாய்
போனவர்கள்

நாங்கள்......

கல் உடைக்கும்
செதுக்கப்படாத
சிற்பங்கள்

நாங்கள்......

சிலந்தி வலையில்
சிறை பிடிக்கபட்ட
இளம் சிங்கங்கள்

நாங்கள்......

ஐம்பதிலும் வளைவோம்
சம்மட்டி அடித்து
ஐந்திலேயே வளைந்துவிட்டோமே

நாங்கள்......

இந்தியாவின் எதிர்கால தூண்கள்
இப்போதைய வேலை
செங்கல் சூளையில்

நாங்கள்......

மத்தாப்பு தொழிற்சாலையில்
புஸ்வாணம் ஆகிபோன
எதிர்கால நட்சத்திரங்கள்

நாங்கள்......

இறக்கைகள் இருப்பதையே
இருட்டடிப்பு செய்யப்பட்ட
பறவைக் குஞ்சுகள்

நாங்கள்......

கிழக்கிலேயே
அஸ்தமிக்கும்
சூரியன்கள்

நாங்கள்......

தீப்பெட்டி தொழிற்சாலையில்
கருகிப்போன
தீக்குச்சிகள்

நாங்கள்......

இந்நாட்டு மன்னர்களாம்
மாடு மேய்க்கும்
மாயாண்டியுமா ?

எங்கள்

இந்தியாவின் எதிர்காலம்
இளைஞர்கள் கையிலாம்
பூ விற்கும் சிறுமி கைலோ பூக்கூடை

நாங்கள்......

சுண்டல் விற்கும்போது
இளமைப் பருவமே
சுனாமியால் சுருண்டுவிடும்

நாங்கள்......

சாலையில் 'குழந்தைகள் ரைம்ஸ்'
புத்தகம் விற்கும்
பள்ளிசெல்லா குழந்தைகள்

நாங்கள்......

திருவிழாவில் தொலைந்ததுபோல்
திக்கு தெரியாமல்
தொழிற்சாலையில்

நாங்கள்......

குழந்தை என்ற
முகவரி இழந்த
முகங்கள்

நாங்கள்......

கொண்டாட்டங்கள் கேட்கவில்லை
கூடங்கள்
பள்ளிகூடங்கள் தான்

அப்பா......

பள்ளிகூடம் செல்லும்
பாதை மட்டும்
காட்டேன் எனக்கு

அம்மா.....

பட்டரை சுத்தியலைவிட
பாடப்புத்த்கம்
கனமானதா ?

அண்ணா...

சட்டைக்கு காஜா
போட்டது போதும்
பள்ளிச் சீறுடை வங்கித்தா எனக்கு

அக்கா....

சிலேட்டும் பலப்பமும்
வாங்கி கொடேன்
உளிகள் சுமந்து கை வலிக்கிறது

எங்களுக்கு வேண்டாம்

மே தினக் கொண்டாட்டம்
எங்களை குழந்தைகளாகவே
இருக்க விடுங்கள்

கைமட்டும் கொடுங்கள்

எங்கள் கால்கள்
வாழ்கையின் அடுத்த
அடி எடுத்து வைக்க !

Friday, October 29, 2010

ஹாஸ்டலில் இருந்து...



உன்னைக் கட்டிப்பிடிக்கும்
காலங்களில் விடுதியில்
விட்டுச்சென்றாய்- என்னைப்
படிப்புக்காக விற்றுச்சென்றாய்!

என் கால்கள் இரண்டும்
உனக்காக முண்ட;
கத்தி அழுதேன் நீயோ
உன் காதை பொத்திச்சென்றாய்;
விழியால் கதறிச் சென்றாய்!

இருள் சூழ்ந்த இரவில் உன்
அணைப்பிற்கு ஏங்கி அழுவேன்;
உன்னால் தலைக்கோதி
இமைமூட வேண்டிய என்னை;
கம்புடன் கண்ணை மூடச்சொல்லும்
விடுதி ஊழியன்!

அழுது அழுது
அழுத்துப்போன;
கனத்துப்போன மனம் - இனி
விடுப்பேக் கிடைத்தாலும்
விருப்பமில்லை
வீட்டிற்க்குச் செல்ல!

பழகிப்போனப் பிரிவோ
எனக்கு மரத்துவிட்டது;
உங்களைக் காணத் தடுத்துவிட்டது!

விண்ணப்பம் என்று
ஒன்றுமில்லை;
விருப்பமிருந்தால செய்யுங்கள்
அனுப்பி விடாதீர்கள் தம்பியையும்
பள்ளி விடுதிக்கு!

Wednesday, October 27, 2010

தேர்தல் முதலீடு





பாராளுமன்ற தேர்தலென்றால்
தாராளமாய் பணம் கிடைக்கும்...
இடைத்தேர்தல் வந்தாலும்
இது போலவே கிடைத்திருக்கும்...
பணம் மட்டும் தந்தால் போதும்
எமனுக்கும் வாக்களிப்போம்
இறைவனையே தோற்கடிப்போம்...!


எங்களின் பலம்கொண்ட

பசிமறந்த உழைப்புக்கு
பலனேதும் கிடைத்ததில்லை...
பல போராட்ட குழுவிருந்தும்
பசிபோக்க யாருமில்லை...
பணம்தந்தால் ஓட்டுண்டு
தேர்தலென்று வந்துவிட்டால்
கடவுளுக்கே வேட்டுண்டு....!


சோறள்ளி உண்பதற்கும்

சேறள்ளி உழைப்பதற்கும்
உண்டான கையென்றாலும்
தேர்தலுக்கு தேடி வந்து
ஒற்றை விரலில் மைபூசி
வாக்களிக்க பலநூறு பணமளிக்கும்
கூட்டமிங்கே கூடிடுச்சு...!


எவன் வென்றால் நமக்கென்ன

எதிர்கொள்ள தேவையென்ன...?
பணம் வந்தால் போதுமென்று
பழகிக்கொள்ள கற்றுக்கொண்டோம்
வாக்கு மட்டுமே எங்கள் முதலீடு
தேர்தல்தான் எங்களுக்கு பலியாடு...!

Tuesday, October 26, 2010

மனிதநேயம் மலர





பனி பொழியும் காலைப் பொழுது
விடியல் பறவைகளின் உற்சாக ஒலி அலைகள்!
தொடுவானத்தில் கதிரவனின்
வருகைக்கான மேகப் பெண்களின் அணிவகுப்பு !
புத்தம் புதிய புத்தகத்தை
புரட்டிப்பார்க்கும் பள்ளி மாணவன் போல்,
எனக்குள் பிரவாகமெடுக்கும்
ஒரு புதிய வாழ்க்கையின் அருவி நீரூற்று!
இன்றைய பொழுதில் எதையாவது
சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம்!
எல்லா விடியல்களும் எனக்காகவே
என்று எண்ணுகின்ற என் மனம் மட்டும்
ஓயாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறது...
நேற்றைய பொழுது மறைந்தாலும்
நாளைய பொழுதின் மேன்மைக்கு
இன்றைய பொழுதில்................
மனிதநேயம் மலர, மானுடம் தழைக்க
உனது கதவுகளை திறந்து வை!
ஆம் காற்று உள்ளே பிரவேசிக்க அல்ல....
நமது உதவிக் கரங்கள் மற்றவர்களுக்காக
வெளியே செல்ல.....!

Thursday, October 14, 2010

தாயின் புலம்பல்....!




பேர் சொல்ல நான் பெத்தவனே
பெரிய படிப்பெல்லாம் முடிச்சு
வேலை தேடப் போனவனே!

நீ போயி மாசமென்னமோ

எட்டுதான் ஆச்சு
எனக்கு அது
மகாமகமா கழிஞ்சாச்சு!

ஓலையில எழுதும்படி

ஒண்ணுமேயில்ல
ஒன் நெனப்புனால மட்டுந்தான்
எழுதுறேம் புள்ள...

பசு மாடு நேத்துதானே

கன்னு போட்டுச்சு!
சீம்பால பீச்சிறப்ப
ஒன் நெனப்பு வந்து
கண்ண கசக்குச்சு...

மேட்டுக் காட்டுல சோள கருது

நல்லா வெளஞ்சுச்சு
கம்மாயில தண்ணி இல்லாம
சருகா பட்டிடுச்சு...

உனக்கான அத்தமவ

பரிமளத்துக்கு தேதி குறிச்சாச்சு
அரசாங்க உத்தியோக மாப்புள்ள
அவங்க மனச மாத்திபுடுச்சு...

எலித்தொல்ல நம்ம வீட்ல

இப்ப இல்லவே இல்ல
வயித்துப் பசி போக்க
அவை எல்லாம் நம்ம வீட்டு
அடுப்புல வேகுதுல்ல...

மூத்தவளுக்கு வரன் கேட்டு

தரகர் வந்தாரு
கொழுத்த சொத்துள்ள
எடமுன்னு சேதி சொன்னாரு
என்ன ஒண்ணு
ரெண்டாம்தாரமாத்தான்
வாக்கப்பட வேணுமுன்னாரு...

வறுமையும் அவ வயசும்

சரின்னு சொல்ல வைச்சிடுச்சு
சின்னவ வாங்கின மார்க்கு
தொள்ளாயிரத்து மூணு
'என்ன கல்லூரியில சேத்து விடு' ன்னு
பாடாப் படுத்துறா நின்னு...

ஒப்பனுக்கு குடிப்பழக்கம்

இப்ப இல்ல கண்ணு
எப்படி சொல்வேன்
வித்துக் குடிக்க ஒண்ணுமில்லேன்னு
நிப்பாட்டிட்டாகன்னு...

இது கேட்டு நீ ஒண்ணும்

வருத்தப்பட வேணாங்கன்ணு
லட்சியத்தில் நீ ஜெயிக்கணும்
நெலயாய் நின்னு
வெதநெல்ல வித்து பணம்
அனுப்பி வச்சிருக்கேன்
வாங்கி நீ வேளைக்கு சாப்புடு
தோதுபாத்து செலவு செஞ்சு
நாளக் கடத்திடு
தீர்ந்துபோனா கடுதாசி போடு
தாலிமணி வச்சிருக்கேன்
வித்தனுப்பறேன்...

தவறான எண்ணம் வேண்டாம்

தளராத தன்னம்பிக்கையால
நம் தலைமொறையின்
தலையெழுத்த மாத்தி எழுது!

செத்தேன்னு சேதி வந்தா

கொஞ்சம் அழுவு
பொறகு எல்லாமே சகசமுன்னு
மொகத்த கழுவு
வேல ஒண்ணு கெடச்சவுடனே
ஓடி வந்து ஏஞ் சமாதியில
சாஞ்சுபடு
அந்த சந்தோசச் சேதிய
என் காதுல சத்தம் போடு...

Tuesday, October 12, 2010

மனிதா ...!

 

மனிதா...
பாவம் செய்கிறாய் ..!
செய்த பாவத்திற்கு பரிகாரம்
உண்டியலா..?
செய்யப்போகும் பாவத்திற்கு பரிகாரம்
உண்டியலா ...?

உண்டியலில் பணம் போட்டால்

பாவம் தீருமா...?
சபித்தவர்களின்
சாபம்தான் மாறுமா...?

நீ ...போட்ட பணத்தால்

எத்தனை: சுவாமி"கள்
சுவீஸ் கணக்கு வைத்திருக்கிறது
உனக்குத் தெரியுமா...?

ஓசோன் படலத்தில்

ஓட்டை ....!
உண்டியல் போட்டாலும்
உயிர் வாழ முடியாது ...!
"மதத்தை அழிப்போம்
மரம் வளர்ப்போம் "
கோஷம் போடு ...!
குலமும் வாழும் ...
குலதெய்வமும் வாழும் ...!

பணத்தை ...

கோவிலில் போடாதே ...
கோவில் கட்டாதே ...!
மோதல்கள் போதும் ..!

குளம் வெட்டு ...

கும்பிடுகிறோம்...!
படிக்க பள்ளி கட்டு ...
பகுத்தறிவைக் கொடு ...
பாதம் தொடுகிறோம் ...!
நம்ம்பிக்கையை விதைத்து
தன்னம்ம்பிக்கை கொடு ...!
நாளைய சமுதையாமாவது
நலம் பெறட்டும் ...!

மரணம்



இமைப்போல்
இறுக்கிக்காத்த;
இறக்கையில் காத்த
அன்னையும் ஒரு நாள்!

குருதியை வியர்வையாக்கி
கடமையைப் போர்வையாக்கி
விழுதாய் இருந்து
கழுகாய் காவல் காத்த
தந்தையும் ஒரு நாள்!

அழுதால் அழுது
சிரித்தால் சிரித்து
கண்ணாடியாய் நம்
முன்னாடி தோன்றும்
மனைவியும் ஒரு நாள்!

தோல்கள் சுருங்கிக்
நரம்புகள் தோய்ந்து
நாமும் சாய்வோம்
ஒரு நாள்!

உச்சரிக்கும் போதே
உச்சந்தலைக் சிலிர்க்கும்;
எச்சரித்தாலும் நிச்சயம்
அது நடக்கும்!

தொண்டைக்குழியில்
சண்டைப்போடும்
சுவாசம்;
ஈரம் காத்த விழிகள்
தூரல் போடும்;
காதோடு சாரல் தூவும்!

சுற்றி நின்று
சொந்தங்கள்
சோகமயம் காட்டும்;
துடிக்கும் நம் உயிரோ
வெடிக்கக் காத்துக்கொண்டிருக்கும்
பறக்கக் காற்றுக் கொண்டிருக்கும்!

முதல் அழுகை ஆனந்தமானது
நாம் பிறக்கும்போது;
இறுதி அழுகை அழுத்தமானது
நாம் இறக்கும்போது!
 
பிரியும் போது
நிரந்திரமில்லா உலகத்தில்
நிலையாக ஏதேனும்
விட்டுச் செல்லும் நாம்!

நிலையான உலகத்திற்கு
குலையாத நன்மைகள்
குறையாத நன்மைகள்;
சுமந்துச் செல்வோம்;
சுவர்க்கம் செல்வோம்!

Monday, October 11, 2010

வெற்றி படிக்கட்டு ...!







வாழ்க்கை கடலில்
நீந்துகின்றேன் ....,
எனக்கு முன்னால்
யாருமில்லை ...!,
திரும்பி பார்த்தேன் ...
பின்னால் பலர்...!

முன்னாடி சென்றவர்கள்

முன்னேறி இருக்கலாம் ...
மூழ்கியும் இருக்கலாம் ...!
பின்னாடி வருபவர்களுக்கு
நான் முன்னாடிதான் ...!

முன்னாடி சென்றவர்கள்

எனக்கு உந்துதல்,
பின்னாடி வருபவர்கள்
எனக்கு ஆறுதல்...!

கோட்டான்களும் ,

புல்லுருவிகளும்
வாழும் இவ்வுலகில்,
படித்த பள்ளிப்பாடம்
தோற்றுத்தான் போய்விட்டது...!
அனுபவ வாழ்க்கையே
படிப்பாகிப்போனது...!
விடை தெரியா வினாவுக்கு
தேடலே ............
வாழ்க்கையாய்ப் போனது .

விடை தெரிந்தவர்களுக்கு

குழப்பம் கும்மியடித்தது ...!
சரியா... தவறாயென
கணிக்கும் முன்னே ,
காலம் கடந்து விடுகிறது ..
வாழ்வு முடிந்து விடுகிறது ...!

இளைஞனே ,

அனுபவங்களே ..வாழ்க்கை !
அனுபவங்களே படிப்பு ,
தேடு ..தேடு
தேடிக்கொண்டே இரு ...
தேடல்தான் வாழ்க்கை ..!
வெற்றி ..தோல்வி ..
எங்கும் ..எதிலும் உண்டு ,
தோல்வியை ,
ஈவு இரக்கமின்றி
கொன்று விடு ,.!
அதுதான்
வெற்றியின் 'முதற்படிக்கட்டு '

Friday, October 8, 2010

மடியினில் உறங்கும் வெண்ணிலவே!

 

 

மகளாகப் பிறந்த செண்பகமே, என்
மடியினில் உறங்கும் வெண்ணிலவே!
இன்னும் ஒரு ஜென்மத்திலும்
நீ எந்தன் மகளாக வருவாயா...?
இந்த ஆசை நிறைவேறினால்
அப்போது உன்
அம்மாவின் ஆசைகள்
என்னவாக இருக்கும்...?!

விடியலின் சோற்றுக்கு

வெஞ்சனம் வாங்கும்
காசைக்கூட என்
அழகுப் பெண் உனக்கு
அஞ்சனம் வாங்கிடச்
சேமித்து வைத்திருப்பேன்!

ஏழை வீட்டில்

பிறந்தாலென்ன..? என்
ஏஞ்சல் பெண் உனக்குத்
தாய்மடிதான் ஊஞ்சல்
சத்தியமாய்
நானேதான் உனது தாலாட்டு!

உன் பிஞ்சுக்கரங்களில் நானும்

என் அன்பின் பிடியில் நீயும்
ஆசை ஆசையாய்,
ஆனந்தமாய்
நித்தமும் நாம் உண்போம்
நிலாச்சோறு!

கண்ணீருக்கும்

கவலைக்கும்
இடமில்லாமல்,
கண்மணி நீயும் அம்மாவும்
கண்ணாமூச்சி ஆடலாம்
சந்தோசமாய்!

பள்ளிக்கூடம்

சென்று வரும்
பாசமுள்ள
மகளே உனக்காகப்
பலகாரம் செய்துவைத்து
மாலையில் நான் காத்திருப்பேன்!

பாட்டும் கதையும்

பாடமும் உனக்குப்
பாசத்தோடு நான்
சொல்லித்தருவேன்
வீட்டுக் கணக்கும்
சமையலும் கூட
விளையாட்டாக நான்
கற்றுத் தருவேன்!

சந்தோசம் என்றும் உன்

வாழ்வில் மலர
கண்ணீரோடு நான்
பிரார்த்தனை செய்வேன்
அவ்வப்போது ஒரு நாள் மட்டும்
சண்டையிட்டு உன்னோடு
கோபித்துக் கொள்வேன்!

பின்னொரு நாளில்,

சாவின் மடியில் நான்
சாய்ந்திருக்கும் வேளை
சந்தோசமாய் உன்
முகம் பார்த்துச்
சாந்தமாய்க் கண்மூடிப்போவேன்!

வருந்தாதே என் அன்புச் செல்லமே !

எத்தனை ஜென்மங்கள்
வந்தாலும் போனாலும்
இப்போதும் எப்போதும்
நீ மட்டும்தான் எனது பிள்ளை;
இறைவன் எனக்கு
வரமாகத் தந்த
எனது அன்பான தொல்லை!

Tuesday, October 5, 2010

சுமைதாங்கி







நரைத்த தலையில்
பழுத்த நினைவுகள்

பணிந்த உடலில்

பற்றிநிற்கும் ஊன்றுகோல்

சுருங்கிவிட்ட தசைகள்

தொலைந்துபோன பார்வை

தளர்ந்த குரல்

தள்ளாடும் நடை

சின்னக்குழந்தை போல

பேரக்குழந்தைகளுடன்

கொஞ்சிவிளையாடும்

சுமைதாங்கிகள் ஒவ்வொரு
குடும்பத்திலும்,

நலம்பேனவேண்டும்

அவர்கள் மனம்நோகவேண்டாம்

நாளைய சுமைதாங்கி நாம்

என மனதில் நிறுத்தினால்

முதியோர் இல்லம்

இல்லாமை செய்யலாம்

Monday, October 4, 2010

வறுமை சிறுவன்....





ஒரு புழுதி காட்டோடு
ஓடி விளையாடிய நட்பு..

உச்ச்ந்தலையில் விடியலை தூக்கி

உழவுக்கு விழித்தெழுந்த ஜீவன்...

காம்ப்ளான், கெல்லாக்ஸ் நிரப்பாதது,

கஞ்சி குடித்தே விறைப்பேறிய உடம்பு....

மதிய உணவோடு சேர்த்து

மனதையும் கொள்ளையடித்த அரசு பள்ளி....

காசு கொடுத்து கற்க முடியாதது,

கால் அரை வீசை என்று,
காய்கறி விற்றதில் தெரிந்தது கணக்கு...

இப்படியே பழகிப்போனது மனது..

நீர், நிலம், காற்று, வானம், நெருப்பு, பறப்பன, ஊர்வன,
நடப்பன, மிதப்பன...
இப்படியே
வாழ்க்கையின் ஒவ்வொரு வரிகளாக,
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்..

இருப்பவர்கள்,

வாழ்க்கையின் பக்கங்களை
விலை கொடுத்து வாங்கியும்,
கற்றுக்கொண்டே.....
இன்னமும் கற்றுகொண்டே....

Tuesday, September 28, 2010

அன்பு மட்டும் கற்று கொடுத்த கடவுள் !!!!

 

 

தாயே !!!
உன் அன்பை பெற்ற நான் உரைக்கின்ற
உண்மை மொழிகளிது .......
உன் அன்பை,,,
கூற வார்த்தை இல்லை என்றாலும் .....

எனக்கு தெரிந்த வார்த்தைகளையே , மீண்டும் ,

உன் பாதத்திற்கு சமர்பிக்கிறேன் ......

உலகில் வாழும் அனைவருக்கும் ,,

உறவுகள் உயிரை இருப்பதில்லை !..

ஆனால் ,

உயிரையே கொடுத்து அந்த உயிருக்காக
வாழும் உன்னத படைப்பு நீ !!!

நீ மட்டும் தான் ..........


சொந்தங்கள் பல தோன்றிடும்

இனிமையாய் சில நேரங்களில் பேசிடும் ....!

ஆனால் ... !

உண்மையிலேயே!!!!!!!
நான் பெருமையை சொல்லிகொள்ளும் ,
எனக்கு சொந்நதமான உறவு நீ மட்டும்!!!!!

என் நினைவுகள் .......

அனைத்தும் உன்னை நோக்கியே இருக்கும் ......

கடவுளின் வடிவமல்ல தாய் .......

கடவுளால் அனுப்பப்பட்ட அவள் .....

படைப்பில் பிரம்மா!!!

அன்பில் பார்வதி !!!
அறிவில் சரஸ்வதி !!
அழகில் மகாலட்சுமி !!!

என் தாயே !!!


உன்னை போற்றிட எனது இரு

கனங்கள் போதாது,
உன் அன்பால் கலந்து எனக்கு நீ ஊட்டிய உணவு ..

உன் கருணையால் உருவான ,

உன் உடலால் எனக்கு நீ போர்த்திய போர்வை !!!!

என்னை காக்க வேண்டும் என்ற காரணத்தால் .....


பூமா தேவியே பொறுமை இழக்க ,,,

பொறுமையாய் நடந்த உன் கால்கள் ......

இவை அனைத்தும் .....

அப்போதே எனக்கு புரிந்திருந்தால் ,,,,,

இந்த இருட்டான உலகில் வந்து பிறந்திருப்பேனா !!!


என் உலகமே நீதான் என்று ,

தெரியாத நிலையில் தான், இவ்வுலகை
காண பிறந்துவிட்டேன் ....
அவசர அவசரமாய் !!!

வரம் கொடுக்க கடவுள் வந்தால் கூட .......

எனக்கு கிடைத்த பெரிய வரம் ...
நீ இருக்கும் போது, வேறென்ன,
கேட்டு விடப் போகிறேன் ...

உன்னை விட பெரிய வரம் இல்லை என மகிழ்கிறேன் ....


உன் அன்பின் பயணம் முடியாத போது என் வார்த்தையின் அளவும் குறையாது !!!


என்றென்றும் எனக்காக வாழும் உன் எண்ணங்களுக்கு ......

செயல்களுக்கு ....
உணர்வுகளுக்கு ... கடமைகளுக்கு ...

நன்றி !!!! நன்றி !!!!! நன்றி !!!!!!

Friday, September 24, 2010

தாகத்தைத் தணிக்க..



நெடுந்தூரப் பயணம்
தாகத்தைத் தணிக்க
தாகத்துடன் தினமும்
ஏக்கத்துடன்!

வறண்டுப்போன பூமியால்
மிரண்டுப்போன வாழ்க்கை
இறுண்டுப்போன நாங்கள்!

சேர்க்க வேண்டியக் காலத்தில்
சேர்க்காமல் இருந்ததால்
சேற்றைப்பார்க்க முடியாமல்!

படைகளைக் கொண்டு
எதிரிகள் உண்டு
எதிர்காலத்தில்;
எண்ணையைப் போல
நீருக்கும்!

நீரும் இருக்காது
நீயும் இல்லாது!
முழுதாய் காய்ந்திடும்
முன்னே சேர்த்திடு
நீரைக் காத்திடு!

Wednesday, September 22, 2010

கரிசக்காடு....

வானம் பார்த்து காத்துக்கொண்டிருப்பது
வயற்காடு மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கையும் தான்...

வெட்ட வெளிச்சத்தில்

வெயிலின் மடியில் - அவர்களின் தினப் பொழுதுகள்..

நிதர்சனமான உறக்கம்

நிலவின் அரவணைப்பில்- அவர்களின் நடுநிசிகள்..

மழை ஏதுமில்லாத தேசத்தில்,

உழைப்பை மட்டுமே விதைகளாக்கியவர்கள்...

போட்டு எடுக்கமுடியாத நிலையில் முதலீடு

நட்டும், முளைக்காத விதைகளை போல...

ஒதுக்குப்புற மூங்கில் காடுகளை,

ஒருவழியாக வெட்டிச்சாய்த்து,
படிக்கட்டு முதல் பந்தல் வரை
பல்லாயிரம் பேர்களுக்கு மேடை போட்டு
மாண்புமிகுக்களின் முன்னிலையில் நடக்கிறது
"மழை வேண்டி யாகம்".

வேண்டா வெறுப்போடு சிரிக்கிறான்,

"கண்கெட்ட பிறகு ......... எதற்கு ? "

போட்டு எடுக்கமுடியாத நிலையில் முதலீடு

நட்டும், முளைக்காத விதைகளை போல...

வனம் வேண்டாம்..

ஒரே ஒரு மரம் போதும் வீட்டிற்க்கு,
ஒரு சரித்திரம் காய்ந்து கொண்டிருக்கிறது...

உறவும் பிரிவும்



ஒட்டி வந்த உறவுகளை
வெட்டி வந்திருக்கிறோம்
கடமைகளைக் கட்டி
வந்திருக்கிறோம்!

கைக்கோர்த்துக்
கதைப்பேச வேண்டிய
மனைவியை விட்டு
வந்திருக்கிறோம்;
சோகங்களை நட்டு
வந்திருக்கிறோம்!

கந்தையானாலும்
கசக்கி கட்டு பழமொழி உண்டு ;
கசங்கிய சட்டையை நாங்கள்
அணிந்தோம் குடும்பம்
கசங்காமல் இருக்க!

கடல் தேடி வந்திருக்கிறோம்
திரவியத்திற்க்காக;
கனவுகளைத் தொலைத்தோம்
திர்ஹம்சுக்காக!

உள்ளூரில் விலைப்போவாததால்
வளைக்குடாவில் நாங்கள்;
அடிமாட்டு விலைக்கு சிலர்!

ஆளுக்கு ஆறடி
படுப்பதற்கு மட்டும் இங்கே;
ஒற்றை குளியலறைக்கு
எல்லோரும்;
அடுத்த முறை உரிமையாளன்
அலாரமாய் அடிப்பான்
 கதவோடு!

உள்நாட்டு மோகம்
வெளிநாடோ சோகம்
பணம் சேர்த்தாலும் தீராத தாகம்!

இருக்கிறதை விட்டு விட்டு
பறப்பதற்கு ஆசை;
பறந்தப் பின்னும்
பருந்தாய் பணத்திற்கு!

Sunday, September 19, 2010

அனாதைக் குழந்தையின் பிறந்த நாள் பரிசுகள்

 

 

உயிரை வதைக்கும்
தனிமை கண்டு
கண்கலங்குவதேனோ
என்
செல்லப் பெண்ணே?

இந்த உலகம்தானடி

தனிமையில் தவிக்கிறது
உன் உறவின்றி...

உன்னில் -உனக்காக

வாழும் உன் மனம் நான்
நானும் கூட ஒரு
தோழிதான் உனக்கு!

என் கண்மணியே

கண்கலங்காதே!
உனக்காக ஆயிரம்
சொந்தங்கள்
உள்ளதடி
இந்த பூமியில்...

காலையில் உன்

பூ முகம் காண
ஓடி வரும் சூரியன்
உன் தந்தை!

இரவில் உன்னைத்

தாலாட்டி தூங்க வைக்கும்
வெண்ணிலவு
உன் தாய்!

தினமும் உன்

மூச்சுக் காற்றுடன்
கலந்து விளையாடும்
பூங்காற்று - உன்
சகோதரன்!

உன்னைப் பார்த்ததும்

மனம் உருகி
ஓடி வந்து
அணைத்துக் கொள்ளும்
வான் மழை
உன் தோழி!

என்னைவிட அழகா நீ?

என்று எப்போதும்
பொறாமைப் படும்
மலர்கள் உன்
சகோதரிகள்!

இத்தனை இருந்தும்

ஏன் நீ இன்னும்
கண்கலங்குகிறாய்?

இவை அனைத்தும்

கடவுள் உனக்காக -
நீ
பிறந்த அந்த நாள்முதலே
கொடுத்த பரிசுப்
பொருட்கள் கண்ணே!

Friday, September 17, 2010

சுவிஸ் வங்கி

 

சுரண்டிய சொத்தெல்லாம்
சுவிஸ் வங்கியில நாம்
சுதந்திரமாய் இருக்கிறோமோ
ஒண்ணுமே புரியல

பாடுபட்ட மக்களெல்லாம்

பஞ்சத்திலே இருக்குது - அது
பழக்கமாக இலவசத்தில்
கொஞ்சமாய் சிரிக்குது

ஏர் பிடிச்ச காணியெல்லாம்

இயந்திரம்தான் நோறுக்குது - இப்போ
இருட்டில் நின் ற இலஞ்சம் கூட
எமனாய்தான் பிடிக்குது

குறுக்கு புத்தி கட்சியெல்லாம்

கொடியுந்தான் பிடிக்குது - அது
கும்ம்பிட்டுதான் காசு கொடுத்து
கொடுஞ் ஆட்சி செய்ய நினைக்குது

பதினெட்டு வயசினிலே

பலருக்கு பைத்தியம்தான் பிடிக்குது
பாராட்டும் நீதித்துறையோ
பார்த்து தேர்தலிலே குதிக்குது


விலைவாசி ஏற்றதிலே

விண்ணும் கூட குனியுது
வியர்வை சிந்தும் மக்களெல்லாம்
விதி வங்க கடலில் மிதக்குது

நாடாளும் தலைவன் முன்னால்

நாலு வயதில் பிச்சைதான் - இப்போ
போராடும் சில கூட்டத்துக்கு இவர்
போடுவதும் பச்சை சட்டம் தான்

தாரள மயமாக்கதிலே

தனியாரு வழிபோக்கதிலே
யூகத்திலே ஒரு விலை பேசி
உருவாகும் அணு உலையிலே பல உயிர் வீசி

போபால் விஷ தாக்கத்திலே

புரைபோன ஒரு வேகத்திலே
புது சட்டம் செய்வார்
புரியா திட்டம் செய்வார்

அமெரிக்காவில் அணு விபதென்றால்

ஆயுள் காப்பீடு பத்தாயிரம் கோடியாகும்
அடிமையான நம் நாட்டினிலே நாம்
பிழைத்திருந்தால்
ஆயிரத்தி ஐநூறு கோடியாகும்

என்றே விதி செய்வார்

வினை பல செய்வார் அவர்
வீடெல்லாம் பல நாடாகும் - நாம்
விழிதெழுந்தால் அது தூளாகும்

நரசிங்க கவி நான் சொல்வேன்

நண்பா நாம் விழித்தெழுந்தால்
பலம் மீட்டிடலாம் ஓட்டு வாள் கொண்டு
பார் புகழ் காட்டிடலாம்.

Thursday, September 16, 2010

ஆண் தாலாட்டு




ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

தென்றல் தீர்ந்துவிடும்

திங்கள் மறைந்துவிடும் என்றா அழுகிறாய்

கடல் கொண்டுவிடும்

இமயம் தின்றுவிடும் என்றா அழுகிறாய்

ஓசோன் பல ஓட்டை விழும்

உலகம் அழிந்துவிடும் என்றா அழுகிறாய்

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ

ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

காடு குறைந்துவிடும்

காற்றும் நின்றுவிடும் என்றா அழுகிறாய்

மாசு சூழ்ந்துவிடும்

மக்கள் என்ன செய்வார் என்றா அழுகிறாய்

சூரியன் சுட்டுவிடும் மனித

சுதந்திரம் கெட்டுவிடும் என்றா அழுகிறாய்

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ

ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

விஞ்ஞானம் தொட்டுவிடும்

வியாபாரத்தில் செயற்கை உலகம் கட்டிவிடும் என்றா அழுகிறாய்

பல நோய் தாக்கும்

பணபேய் தலைதூக்கும் என்றா அழுகிறாய்

சாக்கடை நீராகும் அதற்கு

சமுத்திரம் பேராகும் என்றா அழுகிறாய்

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ

ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

நீரில்லை வருங்காலத்திலே வாழ

நிலத்தில் மக்களில்லை என்றா அழுகிறாய்

நீ தூங்கு நிறைய கனவு சொல்லுவேன்

நிதானமாக நீ கேளு ஆராரோ கண்ணா ஆராரோ

என் ஆறறிவே கண்ணே என் ஆறறிவே


உன் ஒரு வயதில் உன் கால் பதிக்கும் அது

உழுகின்ற பெரும் ஏர் ஏழுக்கும்

பின் பல மாதத்திலே உன் பால் பல் பிடிக்கும் அது

பழுத்துவிட்டால் சில உதிர்ந்துவிடும்

உதிர்ந்த முத்துகளை நீ விதைஎடுத்து

உழுகின்ற மண்ணிலே நீ முளைத்து

வருகின்ற காலத்திலே வளம் காடக்கு

வயதுக்கு நீ படிக்கையிலே இது போலக்கு

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ

ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

ஆற்று மணலிலே அள்ள அதிசயமாய் மறைஞ்ச தண்ணியிலே

மெல்ல குழிதோண்டு நீ மேக நிழல் கண்டு பின்பு

புதையல் நீராக்கு பூமி சேறாக்கு


விளையாட்டில் விஞ்ஞானம் தோற்கடிச்சு

வெற்றி பெற்றுவிடு விடுதலை இயற்கைக்கு தந்துவிடு

உன்புகழ் தாக்கத்திலே, புகை போக்கதிலே

ஒசோனை உயர்த்திவிடு இந்த உண்மையை என்றும் கொடு

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ

ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

வாலிப வயதினிலே, வயல் காட்டினிலே

வறுமை நீ ஒழிபதற்கு வாழ்கையை நட்டுவிடு
என் கண்ணே வருத்தத்தை நீ போக்கு

காலத்திலே உன் காதல் வேகத்திலே

சரித்திரம் மணந்துவிடு, பூமி சமத்துவம் கண்டுவிடு


ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணேஆராரோ

ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

அதிகாலை தூக்கத்திலே

செல் போன் அலார சிணுங்களிலே இந்த
ரிங்டோன் அழுகை நான் கேட்டு

ஆன்ம சுவாசத்திலே, பெரும் ஆவேசத்திலே

ஆராரோ என்னை ஆராரோ வந்து
யார் எழுப்ப வந்து யார் எழுப்ப எப்ப நீ தூங்கு
என் ஆறறிவே எப்ப நீ விழிப்ப, எப்ப நீ விழிப்ப..........

Wednesday, September 15, 2010

புத்தம் புது தியாகிகள் ..




புற்றீசலாய் பூத்துக்குலுங்கும்
புத்தகக் கண்காட்சிகள் நாங்கள்;
பட்டமாய் பறக்கவேண்டிய வயதில்
பாலைவனத்தில்!

குடும்பம் காக்க எங்களின்
தோள்களைக் கொடுக்க;
கொதிக்கும் வெயிலும்
இதமாய் இருக்கும்!

உண்டாயா என உரிமையோடு
என் குடும்பம் கைப்பேசியில் கதைக்கும்;
இல்லை என்றாலும் ஆமாம் எனச் சொல்லி
அன்பான அஸ்திரம் அம்மாவின் வாயடைக்கும்!

கடல் தாண்டி வந்தாலும்
கடமை கண்ணை மறைக்க;
நிலைமை என்னை நெருக்க
மெழுகாய் உருகினேன் உழைக்க!

குருவியாகச் சேர்த்து
குடும்பத்திற்க்கு அனுப்ப;
நித்தமும் அவர்கள் என்னை நினைக்க
புத்தகத்தில் பதியாத
புத்தம் புது தியாகிகள் நாங்கள்!

எல்லாம் விடுத்து
தனிமையை எடுத்து
தாகத்தோடு நிற்கிறோம் பாலையில்;
அகம் மகிழும்
புறம் நெகிழும் என் போலவே
வீட்டிற்கு ஒரு படைவீரன்
குடும்பத்திற்க்காக இங்கே நான் காணுகையிலே!

Tuesday, September 14, 2010

தெரியவில்லை

 

நிகழ்வது தொடராய் இருந்தாலும்,
தொடர்வது நிகழத்தான்.
விடா முயற்ச்சியால் தான் வெற்றியா?
வெற்றிதான் விடாமுயற்சியா?
வாழ்க்கைதான் போரட்டமா?
போராட்டம் தான் வாழ்கையா?
இதயம் தான் உணர்வுகளா?
உணர்வதுதான் இதயமா?
முளை தான் யோசிக்கச் சொல்கிறதா?
யோசிபதுதான் முளையா?
சிந்துவது தான் இரத்தமா?
இரத்தம் தான் சிந்துகிறதா?
நம்பிக்கை தான் நண்பர்களா?
நண்பர்கள் தான் நம்பிக்கையா?
உறுகுவதுதான் மெழுகா?
மெழுகு தான் உருகுகிறதா?
உணர்ச்சி தான் துண்டுகிறதா?
தூண்டுவது தான் உணர்ச்சியா?
நெருப்பு தான் சுடுகிறாத?
சுடுவதுதான் நெருப்பா?
நீர் தான் மழையா?
மழைதான் நீரா?
கண்கள் தான் பார்க்கிறதா?
பார்ப்பது தான் கண்களா?
நேரத்தை காட்டி சோகம் நெருங்குகிறதா?
சோகத்தால் தான் நேரம் நெருங்குகிறதா?

நம்பிக்கை இல்லாமல்...!

 

 

வந்த வேலை
முடியும் நிலை
இங்கு இல்லை
வாழவும் வழி இல்லை

வயதை தொலைக்கிறோம்

பாசத்தை இழந்தோம்
பல வருடங்களாய்...

எல்லாமே கனவில் தான்

தாய் தந்தை பாசம்
வாரம் ஒரு முறை என்று ஆனது..
சில நேரங்களில்
மாதம் ஒரு முறைதான்
கைபேசி இல்லை என்றால்
எங்கள் பாசம் வெறும் காகிதத்தோடு
கரைந்து இருக்கும்...

மனைவியின் நினைவுகள்

உயிரை கொல்லும்
சில நேரங்களில்
என்னால் அவளும்
உணர்வை தொலைத்து
மரகட்டையை போல
வாழும் நிலை..

மனைவியை நினைத்து

நேசித்து துடிக்கும்
தருணங்களில்
பணத்தின் மீது அருவருப்பு
எங்கள் சந்தோசத்தை விழுங்கும் எமன்...

பல மரணங்கள்

எங்களுக்கு வெறும்
செய்தியாய் போனது

பிறந்த குழந்தை முதல்

சொந்தங்கள் எல்லாம்
நிழற் படமாய்
எங்களோடு..

எதிர்காலத்திற்காக

நிகழ்கால சந்தோஷங்களை புதைத்து
பொருள் தேடுகிறோம்..
முழுமையாக செல்வோம் என்ற
நம்பிக்கை இல்லாமல்...

வெற்றித் தோல்வி

 

 

விடியலின் விடிவெள்ளியாய்
வந்தவனே - நீ
வீழ்ந்து விட்டதற்காக
விழிகள் கலங்கலாமா...?

தோல்வி அடைந்ததற்காக

சந்தோசப்படு!
அது மட்டுமே உனக்கு
அனுபவங்களைக் கற்றுத்தரும்.

தோல்வி என்பது

மனம் தளர்வதர்கள்ள - அது
புதிய உற்சாகத்துடன்
மனம் தளிர்ப்பதர்க்கு!

வீழ்ந்து விட்டதற்காய்

வருத்தம் வேண்டாம் -
எழுச்சி என்பதே
வீழ்ச்சியின் வீழ்ச்சிதானே!

தரையில் வீழ்ந்தபிரகுதானே

ஆழம் விழுது
ஆணிவேர் போடுகிறது

விழுந்து எழுவதில்தானே

அலைகளின் அழகு
அடங்கியிருக்கிறது

இரவுகள் இல்லாமல்

என்றேனும் ஒருநாள்
பூமிப் பந்து சுலன்றதுண்டா...?

இரவின் தூக்கம் என்பது

இன்னும் சுறுசுறுப்பாய்
இயங்குவதற்கான முயற்சிதானே!

மேற்கில் தோற்கின்ற

சூரியன் தானே
மீண்டும் விடிவதர்கான்
நம்பிக்கை விதை!

பௌர்ணமி வெற்றியின்

வளர்பிறை முயற்சிகள் கூட
அமாவாசையில் இருந்துதானே
ஆரம்பமாகின்றது

தோல்வியும் கூட

காற்றினைப் போலவே
நிலையில்லாதது

தோல்விகள்

என்பவை துன்பங்கள் அல்ல - அவை
வாழ்க்கையின்
வெற்றியைக் காண
வழிகாட்டும் போர் முறைகள்

Monday, September 13, 2010

என் கிராமத்து நண்பர்கள்



நீ பெரியவன்
நான் பெரியவன்
என்ற வேறுபாடில்லை
வெண்ணிற வானமும்
செந்நிற மணல்பரப்பும்தான்
நாம் எல்லை கோடுகள்....

அரைக்கால் கால்சட்டையும்
அழுக்கான மேல்சட்டயும்தான்
நம்முடைய சீருடைகள்
காலை முதல் மாலை வரை
ஊரை சுற்றி வரும்
கழுகு கூட்டம் நாம்....

ஆற்றில் குளித்து
குளத்தில் நீந்தி
கிணற்றில் துள்ளி
விளையாடிய நம்
சிறு வயது பருவம்....

ஆற்றங்கரை மணலில்
நாம் அமைத்த வீடுகள்
ஒரு நாள் வாழும்
மணல் சிற்பங்கள்....

கள்ளி பால் எடுத்து
வட்டவாட்டமாய் நாம்விட்ட
நீர் முட்டைகள், இன்றும்
நம் சுவசகாற்றை
சுமந்த படித்தான் செல்கிறது
நம் ஊர் வயல்வெளிகளில்.....

கிழவன் கிளவியென்றால் நாம்
வம்பிழுக்க தவறியதில்லை
இருந்தும் பாட்டி கதைகேக்க
மறுத்ததில்லை- இன்றோ
நம் கதை சொல்லி பாடுகிறது
நம் வீட்டு திண்ணைகள்....

ஒவ்வொரு முறையும் நான்
முகம் பார்க்கும் போதும்
கில்லி அடித்து உடைந்த
என் நெற்றி பரப்பின்
தழும்புகள் நினைவுபடுத்துகிறது
நம் சிறுவயது விளையடினை....

நாம் பிடித்த பட்டாம்பூச்சியின்
நிறங்களை பட்டங்களுக்கு கொடுத்து
வானுயர பறக்க வைத்தோம்
இன்றும் பறந்து கொண்டிருகிறது
பட்டாம்பூச்சியின் சிறகுகளில்....

நாம் விளையாடிய
மணல் பரப்பும் நம்மைவிட்டு
பிரிய மனமில்லாமல்
நம் உடைகளோடு ஒட்டிக்கொள்ளும்
அதுவே நம் சட்டையின் நிரமென்றாகும்....

நம் நண்பன் வட்டத்தில்
ஒரு நண்பன் பாம்புதீண்டி
இறந்தபோது கலங்கிய
விழிகளோடு ஊரில் உள்ள
பாம்புகள் அனைத்தையும்
அடித்து கொன்று
பலிதீர்த்தோம் நண்பனுக்காக....

பள்ளியோடு சிலர் பிரிய
கல்லூரியோடு தொடர்ந்தோம்
நம் நட்பு பயணத்தை
இன்றோ நாம் எங்கு
முடிக்கபோகிறோம் என்று
தெரியாமல் ஆளுக்கொரு
திசையில்- அடிகடி நண்பர்கள்
என்ற அடையாளத்தை மட்டும்
காட்டி கொண்டு....

ஒவ்வொரு முறையும்
நான் ஊருக்கு வரும்போது
பேருந்து இருக்கையோடு
பகிர்ந்துகொள்ள தவறியதில்லை
நம் நட்பு நாட்களை....

நமக்காக வாழ்ந்த நாம்
இன்றோ பிற்காக வாழ்கிறோம்
என்றோ ஒரு நாள் பார்க்கிறோம்
முழுவதுமாய் நலம் கூட
விசாரிக்க முடிவதில்லை
நண்பனிடத்தில்....

ஊர் தெருக்களில் நடந்து
செல்லும் போதும்
வயல் வெளிகளில்
தனியே அமரும்போதும்
நாம் அப்படியே இருந்திருக்க
கூடாதயென்று கண் கலங்க
வைக்கிறது நம்
சிறுவயது ஞாபகங்கள்....

கள்ளி செடியிலும்
ஆலமர விழுதுகளிலும்
நாம் உடைத்த அய்யனார்
சிலையிலும் இன்றும்
அழியமல்தான் உள்ளது
நம் பெயர்கள் நினைவுகலாய்....

இனி கிடைக்காத அந்த
நாட்களை நினைத்துதான்
இனிதே நகர்கிறது என்
இன்றய நாட்கள்.....

வெளிநாடு போனேன்

 

 

பெரிய துண்டாக வாங்கி
தன் உடம்பை மறைத்துக்கொள்ள
ஆசைப்பட்ட அப்பாவிற்கு
சட்டை துணிகளும்........

வேறு வழியின்றி

பற்றாக்குறைக்கு
எனக்காக
தாலியை விற்று
பணம் கொடுத்தனுப்பிய அம்மாவிற்கு
நகைகளும்
வாங்கிக்கொண்டு
நான்கு வருடம் கழித்து
வந்து சேர்ந்தேன்
வெளிநாட்டிலிருந்து........

என் வீடிருக்கும் வீதியின்

முனையில் குடியிருக்கும்
பொன்னம்மாள் கிழவி
என்னை நலம் விசாரித்துவிட்டு
வாய்பொத்தி சொன்னாள்
மறக்காம
உன் அப்பன் ஆத்தா
போட்டோவுக்கு
மாலை வாங்கிட்டு போயி
சாமி கும்பிடு............

கதறி அழுதவனை

கண்கொட்டாமல்
பார்த்துக்கொண்டிருந்தான்
பூக்கடைக்காரன்......!!!

Wednesday, September 8, 2010

முரண்பாடுகள்

 

 

விளம்பரம் செய்யாதே
என்று-விளம்பரம்...

மது நாட்டிற்கும் வீட்டிற்கும்

கேடு
என்று-மது பாட்டல்...

புகை நமக்கு பகை

என்று-சிகரட்...

பிறர் செய்யும் தவறுக்கு

அன்பளிப்பு
revaluation ...

தவறு ஒன்று

தீர்ப்பு இரண்டு
என்று-நீதி மன்றம்...

என்று மாறும்

இந்த முரண்பாடுகள்
ஏக்கங்களுடன்
இந்தியன்....

தமிழ்திருநாட்டின் பெருமைகள்...



என் நாசிக்கு அருகில் வந்த பின், காற்று தான் செல்லும் வழி மறந்து, என்னுள் செல்ல மறுத்தாலும்,

நான் மறித்து போனாலும்!

மறு பிறவி எடுத்தேனும் என் தமிழ் திருநாட்டின் பெருமைகளை கேட்போருக்கு சொல்லுவேன்....


என் தமிழ் திருநாட்டின் பெருமைகளை சொல்ல நினைத்தால் !!!
என் தமிழ் திருநாட்டின் பெருமைகளை சொல்ல நினைத்தால் !!!

எந்த தமிழனுக்கும் வார்த்தைக்கு பஞ்சம் இருக்காது!!!
சொல்லும் அவனுக்கு ஆயுள் மட்டும் பத்தாது!!!

ஒன்று ஒன்றாய் சொல்லுகிறேன் !

உலகுக்கு பொதுமறை கொடுத்ததும் என் தமிழ் நாடு!!!
கடை ஏழு வள்ளல்க ள் வாழ்த்தும் என் தமிழ் நாடு!!!

காவிரி, தென்பென்ணை, பாலாறு பாய்த்து வளம் கொழிக்கும் என் தமிழ் நாடு!
மூத்த மொழி பேசும் மூத்தோர்கள் வாழ்ந்தது, வாழ்வது என் தமிழ்நாடு!

வண்ணத்துபூச்சி சிறகின் ஓவியத்தை விட அழகாய் அமைத்தது என் தமிழ்நாடு!
கன்னிபெண்ணின் புன்னகைக்கு போட்டி போடும், முல்லையின் கொடி படர,
தேர் கொடுத்த இடம் இந்த தமிழ் நாடு!

பிற மொழி கவிக்கு சிலை எடுத்தது என் தமிழ்நாடு!
பொய்யா மொழி கவிக்கும் சிலை எடுத்தது என் தமிழ்நாடு!

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்று சென்னவர் வாழ்ந்தது இந்த தமிழ்நாடு!
மண்ணின் பெருமை காக்கும் பெண்கள் இருப்பதும் என் தமிழ்நாடு!

நீதிக்காக தமையனை தேரை ஏற்றி கொன்ற மன்னன் வாழ்ந்தது என் தமிழ் நாடு!
தன் பிழைக்காக உயிர் நீத்த மன்னன் இருந்தது என் தமிழ் நாடு!

கலைக்கு மதிப்பு கொடுப்பது என் தமிழ் நாடு!
கலைக்கு மரியாதை செய்தவர்களுக்கு ,அதிகாரம் கொடுத்தது அழகு பார்த்தது என் தமிழ் நாடு!

என் தமிழ் திருநாட்டின் பெருமைகளை எழுத முயற்சித்தால் !!!
உலக காகித ஆலையின் உற்பத்தி பத்தாது!!!
எழுதும் என் செந்நிற குருதியின் வேகமும் நிற்காது!!!

என் மனதின் திறவுகோலான, என் எழுதுகோலுக்கு ஓய்வு கொடுக்க நினைக்கிறன்!
உழைக்கும் மனிதனுக்கு ஓய்வு ஒருமுறை என்பதினை நினைத்து மீண்டும் என் மனதினை திறக்கிறேன்!

நான் பிறந்த பொழுது அழுதேன் !
என் இதயம் மௌன கீதம் வாசிக்கும் நேரம் நெருகியதிணை அறிந்து மகிழ்ச்சி!
ஏனென்றால் என் காற்று அடைத்த உடல் கூட என் தமிழ் நாட்டின் மண்ணுக்குள்!

என் தமிழ் நாடு ! என் தமிழ் நாடு ! சுயநலம் மிக்க வார்த்தை ,
இந்த சுயநலம் எனக்கு போதும்!!!