Tuesday, December 6, 2011

இளமைக்கால நினைவுகள்















பிறந்திட்ட நாள் முதல்
பெற்றோரின் அரவணைப்பில்
இருந்திட்ட நாள் தவிர்த்து
பறந்திட்ட நாட்கள் முதல்

மறந்திட்ட விஷயம் நீங்கி
மனதினில் பசுமையாய்
இருந்தினிக்கும் நினைவுகள்
இறுதிவரை பல உண்டு.

வேலியோர ஓணானை
வேகமாய்க் கல்வீசி
பாலூற்றிப் புதைத்துப் பின்
பணம் தேடிப் பார்த்ததுண்டு.

காலிப் பயல்களோடு
கண்டபடி சுற்றியதால்
கோலெடுத்து தந்தையவர்
கோலங்கள் போட்டதுண்டு.

நுனாப்பழம் புசித்துவிட்டு
நாவெல்லாம் கருப்பாக்கி
வீணாய் பயந்ததுண்டு
வெளியாகும் மறு நாளில்.

ஓர் கிணறு விடாமல்
ஓயாமல் நண்பரொடு
இருவிழியும் சிவந்திட
இருளும்வரை நீராடி

நேரமிக வானதினால்
நெஞ்சமது பட படக்க
விரைந்து வீடுநோக்கி 
விசனமாய் செல்கையில்

தெருவிலெனை தாயவளும்
தவிப்புடனே தேடியதை
பொறுப்புடனே சொல்லிட்டு
புளிகரைப்பர் அடிவயிற்றில்.

பொறுமை தனை இழந்து
பொங்கிவரும் கோபமுடன்
வருகையை எதிர்பார்த்து
வாசலிலே இருந்தாலும்

புறவழியே திருடன்போல்
புகுந்தே தெரியாமல்
சோறெடுத்து பசியாற
சீக்கிரமாய் உள்தள்ள

கூரிய செவியதனில்
கேட்டிட்ட சிற்றொலியில்
காரியம் உணர்ந்திட்டு
கையில் தடி மறைத்திட்டு

சிரிப்போடு சளிக்காமல்
சாப்பிட காத்திருந்து
வரிந்திடுவாள் வைதிடுவாள்
விழி நீரை வெளியேற்றி.

வீட்டிலுள்ள பொருள் சிறிது
வீதமாய் சேர்த்தெடுத்து
கூட்டாஞ் சோறாக்கி
கூட்டாளி பசங்களோடு

சுட்டெடுத்த மீனோடு
சூட்டோடு ரசித்து 
கூட்டமாய் களிப்புடன்
கூடி தின்றதுண்டு.

எருமை மாட்டின் மேலேறி
எமதர்ம ராசன்போல்
விரட்டி மணலாற்றில்
விழுந்து புறண்டிட்டு

ஆற்றோர கரையினிலே
அடர்ந்திருக்கும் நாணலதில்
காற்று புக துளை செய்து
கானம் பாட முயன்றதுண்டு.

காவலது மிகுந்திருந்தும்
காய்த்திருக்கும் மாமரத்தில்
கவண்கொண்டு கல்லெறிந்து
கிடப்பவற்றை பொறுக்கி

சவாரி குதிரை போல
சட்டென பறந்து சென்று
லாவகமாய் உடைத்ததனை
பொடி தூவி சென்றதுண்டு.

பொன்வண்டு பிடித்து தீப்
பெட்டியினில் போட்டு
நண்பர்கள் மத்தியினில்
வித்தைகள் காட்டி

தின்பதற்கு தழைபோட்டு
தினம்தோறும் கவனிக்க
கண்டெடுத்த தாயவளும்
காணாமல் செய்ததுண்டு.

பாட புத்தகத்தில்
பக்கத்துக்கு ஒன்றாய்
ஒடித்து மயிலிறகை
ஒப்புறவாய் வைத்திட்டு

குட்டி போடும் என்றெண்ணி
காலை மாலை இருமுறையும்
தொட்டெடுத்து மெதுவாய்
திறந்து பார்த்ததுண்டு.

அதிகாலை குளிரினில்
அனல் மூட்டி அமர்ந்திருக்கும்
தாத்தாவின் அருகில் போய் 
தனல் நோகா தொலைவினில்

ஆதரவாய் அரவணைப்பில்
அமர்ந்தவண்ணம் கதையோடு
போதித்த அறிவுறைகள்
பொறுமையாய் கேட்டதுண்டு.

கவலையே இல்லாமல்
கள்ளமில்லா நெஞ்சமுடன்
பவனி வந்த நாட்கள் மீண்டும்
பூவுலகில் கிடைத்திடுமா

சுவடுகளை திரும்பப் பார்த்து
சிந்தை பின்னே சென்றாலும்
நவீன காலம் தான் 
நடப்பதற்கு வழியில்லை...

ஞாபகங்களுடன்,