Friday, November 19, 2010

அன்பிற்கு உயிர் கொடுத்தவளே!!!...


*
எத்தனை கடவுளிடம்
எனக்காக வேண்டியிருப்பாய்!
எத்தனை மணித்துளிகள்
எனக்காக காத்திருந்தாய்!
எத்தனை இரவுகள்
என் வரவுக்காக விழித்திருந்தாய்!
எத்தனை ஆண்டுகள்
இரவில் விழிக்காமல் நானிருக்க
விழித்து கொண்டு நீ இருந்தாய்!
*
கருவறையில் இருக்கும்
கல்லைவிட,கள்ளகபடமில்லாத,
கருவறையில் சுமந்தவளே,
கடவுள் என்பதை நீ உணர்த்தினாய்!
*
என் வலிக்காக நான் அழுதேன்.
வளர்த்தவளுக்காக நான் அழுததில்லை...
காரணம் தெரியாமல் என்னோடு நீ அழுதாய்!
*
இதயத்தை உதைத்தவளுக்காக
வலியால் நான் அழுதேன்...
காரணம் ஏதும் கேட்காமல் அப்போதும்
என்னுடன் நீ அழுதாய்!
*
அன்பு ஒன்றே உலகில்
சிறந்தது என்பதை தெரியவைத்தாய்!
அன்புதான் அழுகையாக
வெளிப்படுகின்றது என்பதை புரியவைத்தாய்!
அன்பே அன்னை!அன்புதான் உலகம்
என்பதை உணர்த்தினாய்!
*
கருவறையில் இருந்தபோது
கரு என்று பாராமல்,
உன் உயிரை பற்றி நினைக்காமல்
கருவிற்கு ஓர் உயிர் கொடுத்தாய்!
*
மழலையாக தவழ்ந்தபோது
இரத்தம் என பாராமல்,
என் கண்ணீரை துடைக்க
இரத்தத்தை பாலாக மாற்றி,
எனை மகிழச்செயதாய்!
*
மனிதனாக வளர்ந்தபோது
சோகம் தெரியாமல் நான் வாழ,
சுகமாக நான் இருக்க,
நலமுடன் நான் வாழ,
எனக்காக என்று நான் இருந்தபோது
தனக்காக என்று நீ இல்லாமல்,
இரத்தத்தை உருக்கி
வியர்வை சிந்தினாய்!
*
அன்றும் எனக்காக
கண்ணீர் வடித்தாய்!
இன்றும் எனக்காக
கண்ணீர் வடிக்கின்றாய்!
*
இதுவரை செய்த தவறுகளுக்காக
தலை வணங்குகின்றேன்!
வாழ்க்கையை தொலைக்க
நான் விரும்பவில்லை...
இதோ!கடவுளாக
உனை வணங்குகின்றேன்!
*
கடல் தாண்டி
பயணம் செய்ய விருப்பமில்லை.
நீயே!எந்தன்
அசையா சொத்தாக இருக்கும்போது!
காற்றை
சுவாசிக்க விருப்பமில்லை...
நீயே!எந்தன்
மூச்சாக இருக்கும்போது!
ஒலியினை கூட
கேட்க விருப்பமில்லை....
நீயே!எந்தன்
செவியாக இருக்கும்போது!
*
அத்தனையும்,
இத்தனையும்,
இத்தனை நாட்கள்
நான் இழந்ததுபோதும்...
இனி,அன்பை மட்டும் என்றும்
நான் இழக்க விரும்பவில்லை...
*
தாயே!உனையே!
என் இதயத்தில் நேசிக்கிறேன்!
உன்னை மட்டுமே
உயிரின் மூச்சாக சுவாசிக்கிறேன்!
*
இனி,எனக்கு
ஒரு பிறப்பு என்றால்,
அது உன் கருவறையாக
மட்டும்தான் இருக்க வேண்டும்.
எனக்கு இறப்பு என்றால்,
அதுவும் உன் மடியாக
மட்டுதான் இருக்க வேண்டும்....
*
இனி,உனக்கு
ஒரு பிறப்பு என்றால்,
எனக்கு மகளாக
மட்டும்தான் நீ பிறக்க வேண்டும்...
மகளாக பிறந்து,
தாயாக இருந்து,
எனை நீ
வளர்க்க வேண்டும்.....
*
கடவுள்
என்பவன்
ஒருவன் இருந்தால்,
இதனையேற்று
எனக்காக
செவி சாய்க்க வேண்டும்....
*
அன்பே கடவுள்!
அன்பை தரும்
அன்னை மட்டுமே கடவுள்!
தாயே!நீ வாழ்க!
அன்பிற்கு உயிர் கொடுத்தவளே!!!
பல்லாயிரகணக்காண்டுகள் நீ வாழ்க!
*

Monday, November 15, 2010

சொந்தங்களுடன்தானே கொண்டாடினீர்கள்!!!???


சிந்திய சோற்றுப் பருக்கைகளை
கொத்தும் புறாக்கள் வீட்டின் முன்
வருவதே இல்லை!

இலையுதிர் காலங்கள்

என்பது செய்தியாய்
கேட்டால்தான் தெரிகிறது!

மாலையை நினைவுப் படுத்தும்

மல்லிகை எல்லாம்
மாற்றான் தோட்டத்திலும் இல்லை!

அந்த ஜன்னல் ஓர

சாரல்களை எல்லாம்
கண்ணாடி போட்டு மூடிவிட்டனர்!

இப்பொழுதெல்லாம் செல்லப் பிராணிகள்

பிளாஸ்டிக் பொம்மைகள்
என்றாகிவிட்டது!

மரத்தடி சாமிகள் கூட

சாலையின் ஓரமாய்
நகர்ந்துவிட்டனர்!

குழந்தைகள் எல்லாம்

திடலுக்கு பதில்
வீடியோ கேமில் அமர்ந்துவிட்டனர்!

விறகு அடுப்பு ஊதியவர்கள் கூட

பஞ்சு வைத்து புகைக்க
ஆரம்பித்து விட்டனர்!

கொக்குகளும் நாரைகளும்

வட்டமிட ஆழ்குழாய்
கிணறுகளையாவது தேடுகின்றன!

அரிசி கோலங்கள்

சுண்ணாம்பாகி சாயப் பூச்சாகி
கட்டெறும்புகளாகிவிட்டன!

என்ன செய்வது

இந்த தின மழையில்
முளைக்கும் அபூர்வ காளான்களை!

இதைத்தானே செய்தீர்கள்???

இந்த தீபாவளியையாவது விட்டுப்போன
சொந்தங்களுடன்தானே கொண்டாடினீர்கள்!!!???

Friday, November 12, 2010

முதல் மடல்..



முத்தான என் பிள்ளை
முத்தமிட்டு அனுப்பியிருக்கும்
முதல் மடல்!

கெஞ்சிக் கூத்தாடும்
அவன் பிஞ்சி விரல்கள்;
கொஞ்சி விளையாடியக்
காகிதத்தைத்
தொட்டுப் பார்ப்பேன்;
கோலம் இட்டதைக்;
கண்டு ரசிப்பேன்!

அடித்தல் திருத்தலுடன்;
ஆங்காங்கேப் பிழைகள்;
அவன் அழித்து
எழுத முற்பட்டதெல்லாம்
அப்பட்டமாய் அப்படியே
என்னைப் போல!

பெருமைப் பொங்க;
உதடுகள் பிரிய;
ஓடிக் காட்டுவேன்;
நண்பர்களிடம்!

தனித்திருந்து நான்
வெளிநாட்டில்
சிந்திய வியர்வை;
பலனளிக்கிறது;
மடலில் பிரதிப்பலிக்கிறது!

அவன் கிறுக்கல்களை
இல்லை இல்லை
கவிதைகளைப் 
படிக்க முடியவில்லை;
என்றாலும்

Tuesday, November 9, 2010

என் கல்லூரி இருக்கையே!!!







அனுமதி பெறாமல் உன்மேல்
நான் அமரும்பொழுது என்னை
முதுகோடு சேர்த்து அனைத்துக் கொண்டாயே!

கொஞ்சம் கொஞ்சமாய்
எனக்கு பழகக் கற்றுத் தந்தாய்
பழகினேன், நண்பர்கள் என்றார்கள்!

கோபம் வரும் பொழுது
எனக்கு சிரிக்க கற்றுத் தந்தாய்
சிரிக்க வைத்தேன், ரசிகன் என்றார்கள்!

அவள் கண்களை காட்டி காட்டி
எனக்கு காதலிக்க கற்றுத் தந்தாய்
காதலித்தேன், கவி என்றார்கள்!

நானும் நண்பனும் நட்பு என்று
உறவாடி மகிழ்கையில் நீ
அண்டை இருக்கையுடன் தோள் சேர்த்து
வெற்றியில் தட்டிக்கொண்டாய்!

தலைவலியில் உன் மேல்
தலை சாய்க்கும் பொழுதெல்லாம்
என் தலைக் கோதி என்னை ஏற்றுக்கொண்டாய்!

முதல் மாணவனாய் மதிப்பெண்களை
சொன்ன பொழுது ஆனந்தமாயும்
தோல்வியில் சோகமாயும்
என் கண்ணீரை வாங்கி கொண்டாய்!

கோபத்தில் எத்தனை முறை
பேனா முனையால் உன்னை காயப்படுத்திருகிறேன் !

ஆத்திரத்தில் எத்தனை முறை
கீழே தள்ளி இருக்கிறேன்!

எத்தனை முறை எட்டி உதைதிருக்கிறேன்!

அத்தனையும் தாங்கிக் கொண்டு
இந்த நான்கு ஆண்டுகளையும்
என்னையும் தாங்கிக் கொண்ட உன்னை
இங்கேயே விட்டு செல்கிறேன்.

நான் உன்மேல் பழகிய கையெழுத்துகள்
மட்டும் போதும் என்று புதியவனை
ஏற்றுக் கொள்ளுமுன் ஒரு நிமிடம்
என் வேண்டுதலை கேள்,

ஆண்டுகள் கடந்து என் வெற்றிகள்
முழுவதும் உன் காலடியில் சமர்பிக்க
வரும்பொழுது மீண்டும் உன் கரம் விரித்து
அமர ஒரு இடம் தருவாயா நான்
அமர்ந்து எழுந்த என் கல்லூரி இருக்கையே!!!

கையேந்தி பவன்

 

அழுகி போன தக்காளி
அலசாத வெங்காயம்
சொத்தையான காய்கறி
சோற்றுக்கு மலிவான அரிசி
வடிகட்டாத உப்பு நீர்
வறுவலுக்கு பனங் கொட்டை எண்ணெய்
கள்ளச்சந்தை எரிவாயு
கழுவாத எச்சில் பாத்திரம்
ஈக்களுக்கு இன்பபுரி
இருட்டுக்கு இன்னொரு பூரி

பூச்சி மைதா ரொட்டிக்கு

புகை படிந்த தோசை கல்லில்
பருப்பில்லா சாம்பார்
பலவகையாய் கூட்டியே
புளித்துப்போன தயிரோடு
புளிக்காத ஊறுகாய்
வியர்வை சொட்டும் உழைப்பாளிக்கு
விளங்காத சுகாதாரம்
எட்டு ரூபாய் சாப்பாட்டில்
இதை விட வேறில்லை
மூட்டை தொக்கும் கணேசன்
மூன்று ரூபாய் பாக்கிக்கு
மதிய சாப்பாட்டை மறந்துதான்
மாடாய் உழைக்கிறான் நொந்துதான்

உயர்தர சைவ உணவில்

உழைக்கும் வர்க்கம் மலிவு விலையில்
கனவைத்தான் கண்டுவைக்க
காசில்லாமல் உண்டு வைக்க
ஒரு ஈ குளிரூட்டிய அறையில்
உட்கார்ந்து தின்கிறதாம்
ஏழைகளை பார்த்துதான்
இந்த கவிதையை படிக்கிறதாம்
எங்களைவிட மனிதனெல்லாம்
இலவசமாய் உண்பதில்லை
தப்பித்தவறி அடித்தால் கூட
தடுமாறும் மரணம் கூட
ஊழல் போன உளுத்தர்களின்
உயரும் கையை கண்டுதான்
பறந்து நான் செல்கின்றேன் - அவர்
பார்க்கும்போது வாயில் நுழைந்து
இன்னொரு ஏப்பம் விடுகின்றேன்
எமன் வந்தால் மட்டும் இறக்கின்றேன்

மோட்சத்தின் என் சாவை

முழித்திருந்து கண்டிடுங்கள்
கையேந்தி பவன் அருகில் எனக்கு
கல்லறையை கட்டிடுங்கள்

Tuesday, November 2, 2010

மாதச் சம்பளம்

 
 
 
உழைப்பிற்கு ஊதியமாய்
களைப்பிற்கு உற்சாகமாய்
மாதச்சம்பளம்;
வாங்கியதும் வீங்கிய
கடமைக்குத் தீனியாய்!

கட்டிப்பிடித்து ஒட்டிப் பார்த்தாலும்
ஒட்டாமல் ஒடும்
ஒட்டப்பந்தய சூரனாக!

மலறும் முகம்
மணிக்கணக்கிற்குத்
தாங்காது;
மணியும் என்
கணக்கிற்கேப் போகாது!

கர்ணம் போட்டு வண்ண
வண்ணமாய் கனவுகள்
கண்டாலும்;
தங்காது தங்கம்
விற்கும் விலைக்கு!

எப்போதாவது ஏறும் சம்பளம்;
ஒட்டிபிறந்த உடன்பிறப்பாய்
கூடவே என் தேவைகளும்!
ஆறுதலாய் பணம் அனுப்பிய
ரசீது மட்டும் என் கையில்!