Friday, October 8, 2010

மடியினில் உறங்கும் வெண்ணிலவே!

 

 

மகளாகப் பிறந்த செண்பகமே, என்
மடியினில் உறங்கும் வெண்ணிலவே!
இன்னும் ஒரு ஜென்மத்திலும்
நீ எந்தன் மகளாக வருவாயா...?
இந்த ஆசை நிறைவேறினால்
அப்போது உன்
அம்மாவின் ஆசைகள்
என்னவாக இருக்கும்...?!

விடியலின் சோற்றுக்கு

வெஞ்சனம் வாங்கும்
காசைக்கூட என்
அழகுப் பெண் உனக்கு
அஞ்சனம் வாங்கிடச்
சேமித்து வைத்திருப்பேன்!

ஏழை வீட்டில்

பிறந்தாலென்ன..? என்
ஏஞ்சல் பெண் உனக்குத்
தாய்மடிதான் ஊஞ்சல்
சத்தியமாய்
நானேதான் உனது தாலாட்டு!

உன் பிஞ்சுக்கரங்களில் நானும்

என் அன்பின் பிடியில் நீயும்
ஆசை ஆசையாய்,
ஆனந்தமாய்
நித்தமும் நாம் உண்போம்
நிலாச்சோறு!

கண்ணீருக்கும்

கவலைக்கும்
இடமில்லாமல்,
கண்மணி நீயும் அம்மாவும்
கண்ணாமூச்சி ஆடலாம்
சந்தோசமாய்!

பள்ளிக்கூடம்

சென்று வரும்
பாசமுள்ள
மகளே உனக்காகப்
பலகாரம் செய்துவைத்து
மாலையில் நான் காத்திருப்பேன்!

பாட்டும் கதையும்

பாடமும் உனக்குப்
பாசத்தோடு நான்
சொல்லித்தருவேன்
வீட்டுக் கணக்கும்
சமையலும் கூட
விளையாட்டாக நான்
கற்றுத் தருவேன்!

சந்தோசம் என்றும் உன்

வாழ்வில் மலர
கண்ணீரோடு நான்
பிரார்த்தனை செய்வேன்
அவ்வப்போது ஒரு நாள் மட்டும்
சண்டையிட்டு உன்னோடு
கோபித்துக் கொள்வேன்!

பின்னொரு நாளில்,

சாவின் மடியில் நான்
சாய்ந்திருக்கும் வேளை
சந்தோசமாய் உன்
முகம் பார்த்துச்
சாந்தமாய்க் கண்மூடிப்போவேன்!

வருந்தாதே என் அன்புச் செல்லமே !

எத்தனை ஜென்மங்கள்
வந்தாலும் போனாலும்
இப்போதும் எப்போதும்
நீ மட்டும்தான் எனது பிள்ளை;
இறைவன் எனக்கு
வரமாகத் தந்த
எனது அன்பான தொல்லை!

No comments:

Post a Comment