Sunday, October 31, 2010

சிலந்தி வலையில் சிறைபட்ட சிங்கங்கள்

 

நாங்கள் யார்?
குழந்தைகளா ?
தொழிலாளர்களா?, இல்லை
குழந்தைத் தொழிலாளிகள்

நாங்கள்......

பூவாகாமலே
புதைக்கப்பட்ட
மொட்டுக்கள்

நாங்கள்......

துவக்கத்தையே
தொலைத்த
முடிவுகள்

நாங்கள்......

முகவுரையிலேயே
முடிவுரையாய்
போனவர்கள்

நாங்கள்......

கல் உடைக்கும்
செதுக்கப்படாத
சிற்பங்கள்

நாங்கள்......

சிலந்தி வலையில்
சிறை பிடிக்கபட்ட
இளம் சிங்கங்கள்

நாங்கள்......

ஐம்பதிலும் வளைவோம்
சம்மட்டி அடித்து
ஐந்திலேயே வளைந்துவிட்டோமே

நாங்கள்......

இந்தியாவின் எதிர்கால தூண்கள்
இப்போதைய வேலை
செங்கல் சூளையில்

நாங்கள்......

மத்தாப்பு தொழிற்சாலையில்
புஸ்வாணம் ஆகிபோன
எதிர்கால நட்சத்திரங்கள்

நாங்கள்......

இறக்கைகள் இருப்பதையே
இருட்டடிப்பு செய்யப்பட்ட
பறவைக் குஞ்சுகள்

நாங்கள்......

கிழக்கிலேயே
அஸ்தமிக்கும்
சூரியன்கள்

நாங்கள்......

தீப்பெட்டி தொழிற்சாலையில்
கருகிப்போன
தீக்குச்சிகள்

நாங்கள்......

இந்நாட்டு மன்னர்களாம்
மாடு மேய்க்கும்
மாயாண்டியுமா ?

எங்கள்

இந்தியாவின் எதிர்காலம்
இளைஞர்கள் கையிலாம்
பூ விற்கும் சிறுமி கைலோ பூக்கூடை

நாங்கள்......

சுண்டல் விற்கும்போது
இளமைப் பருவமே
சுனாமியால் சுருண்டுவிடும்

நாங்கள்......

சாலையில் 'குழந்தைகள் ரைம்ஸ்'
புத்தகம் விற்கும்
பள்ளிசெல்லா குழந்தைகள்

நாங்கள்......

திருவிழாவில் தொலைந்ததுபோல்
திக்கு தெரியாமல்
தொழிற்சாலையில்

நாங்கள்......

குழந்தை என்ற
முகவரி இழந்த
முகங்கள்

நாங்கள்......

கொண்டாட்டங்கள் கேட்கவில்லை
கூடங்கள்
பள்ளிகூடங்கள் தான்

அப்பா......

பள்ளிகூடம் செல்லும்
பாதை மட்டும்
காட்டேன் எனக்கு

அம்மா.....

பட்டரை சுத்தியலைவிட
பாடப்புத்த்கம்
கனமானதா ?

அண்ணா...

சட்டைக்கு காஜா
போட்டது போதும்
பள்ளிச் சீறுடை வங்கித்தா எனக்கு

அக்கா....

சிலேட்டும் பலப்பமும்
வாங்கி கொடேன்
உளிகள் சுமந்து கை வலிக்கிறது

எங்களுக்கு வேண்டாம்

மே தினக் கொண்டாட்டம்
எங்களை குழந்தைகளாகவே
இருக்க விடுங்கள்

கைமட்டும் கொடுங்கள்

எங்கள் கால்கள்
வாழ்கையின் அடுத்த
அடி எடுத்து வைக்க !

Friday, October 29, 2010

ஹாஸ்டலில் இருந்து...



உன்னைக் கட்டிப்பிடிக்கும்
காலங்களில் விடுதியில்
விட்டுச்சென்றாய்- என்னைப்
படிப்புக்காக விற்றுச்சென்றாய்!

என் கால்கள் இரண்டும்
உனக்காக முண்ட;
கத்தி அழுதேன் நீயோ
உன் காதை பொத்திச்சென்றாய்;
விழியால் கதறிச் சென்றாய்!

இருள் சூழ்ந்த இரவில் உன்
அணைப்பிற்கு ஏங்கி அழுவேன்;
உன்னால் தலைக்கோதி
இமைமூட வேண்டிய என்னை;
கம்புடன் கண்ணை மூடச்சொல்லும்
விடுதி ஊழியன்!

அழுது அழுது
அழுத்துப்போன;
கனத்துப்போன மனம் - இனி
விடுப்பேக் கிடைத்தாலும்
விருப்பமில்லை
வீட்டிற்க்குச் செல்ல!

பழகிப்போனப் பிரிவோ
எனக்கு மரத்துவிட்டது;
உங்களைக் காணத் தடுத்துவிட்டது!

விண்ணப்பம் என்று
ஒன்றுமில்லை;
விருப்பமிருந்தால செய்யுங்கள்
அனுப்பி விடாதீர்கள் தம்பியையும்
பள்ளி விடுதிக்கு!

Wednesday, October 27, 2010

தேர்தல் முதலீடு





பாராளுமன்ற தேர்தலென்றால்
தாராளமாய் பணம் கிடைக்கும்...
இடைத்தேர்தல் வந்தாலும்
இது போலவே கிடைத்திருக்கும்...
பணம் மட்டும் தந்தால் போதும்
எமனுக்கும் வாக்களிப்போம்
இறைவனையே தோற்கடிப்போம்...!


எங்களின் பலம்கொண்ட

பசிமறந்த உழைப்புக்கு
பலனேதும் கிடைத்ததில்லை...
பல போராட்ட குழுவிருந்தும்
பசிபோக்க யாருமில்லை...
பணம்தந்தால் ஓட்டுண்டு
தேர்தலென்று வந்துவிட்டால்
கடவுளுக்கே வேட்டுண்டு....!


சோறள்ளி உண்பதற்கும்

சேறள்ளி உழைப்பதற்கும்
உண்டான கையென்றாலும்
தேர்தலுக்கு தேடி வந்து
ஒற்றை விரலில் மைபூசி
வாக்களிக்க பலநூறு பணமளிக்கும்
கூட்டமிங்கே கூடிடுச்சு...!


எவன் வென்றால் நமக்கென்ன

எதிர்கொள்ள தேவையென்ன...?
பணம் வந்தால் போதுமென்று
பழகிக்கொள்ள கற்றுக்கொண்டோம்
வாக்கு மட்டுமே எங்கள் முதலீடு
தேர்தல்தான் எங்களுக்கு பலியாடு...!

Tuesday, October 26, 2010

மனிதநேயம் மலர





பனி பொழியும் காலைப் பொழுது
விடியல் பறவைகளின் உற்சாக ஒலி அலைகள்!
தொடுவானத்தில் கதிரவனின்
வருகைக்கான மேகப் பெண்களின் அணிவகுப்பு !
புத்தம் புதிய புத்தகத்தை
புரட்டிப்பார்க்கும் பள்ளி மாணவன் போல்,
எனக்குள் பிரவாகமெடுக்கும்
ஒரு புதிய வாழ்க்கையின் அருவி நீரூற்று!
இன்றைய பொழுதில் எதையாவது
சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம்!
எல்லா விடியல்களும் எனக்காகவே
என்று எண்ணுகின்ற என் மனம் மட்டும்
ஓயாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறது...
நேற்றைய பொழுது மறைந்தாலும்
நாளைய பொழுதின் மேன்மைக்கு
இன்றைய பொழுதில்................
மனிதநேயம் மலர, மானுடம் தழைக்க
உனது கதவுகளை திறந்து வை!
ஆம் காற்று உள்ளே பிரவேசிக்க அல்ல....
நமது உதவிக் கரங்கள் மற்றவர்களுக்காக
வெளியே செல்ல.....!

Thursday, October 14, 2010

தாயின் புலம்பல்....!




பேர் சொல்ல நான் பெத்தவனே
பெரிய படிப்பெல்லாம் முடிச்சு
வேலை தேடப் போனவனே!

நீ போயி மாசமென்னமோ

எட்டுதான் ஆச்சு
எனக்கு அது
மகாமகமா கழிஞ்சாச்சு!

ஓலையில எழுதும்படி

ஒண்ணுமேயில்ல
ஒன் நெனப்புனால மட்டுந்தான்
எழுதுறேம் புள்ள...

பசு மாடு நேத்துதானே

கன்னு போட்டுச்சு!
சீம்பால பீச்சிறப்ப
ஒன் நெனப்பு வந்து
கண்ண கசக்குச்சு...

மேட்டுக் காட்டுல சோள கருது

நல்லா வெளஞ்சுச்சு
கம்மாயில தண்ணி இல்லாம
சருகா பட்டிடுச்சு...

உனக்கான அத்தமவ

பரிமளத்துக்கு தேதி குறிச்சாச்சு
அரசாங்க உத்தியோக மாப்புள்ள
அவங்க மனச மாத்திபுடுச்சு...

எலித்தொல்ல நம்ம வீட்ல

இப்ப இல்லவே இல்ல
வயித்துப் பசி போக்க
அவை எல்லாம் நம்ம வீட்டு
அடுப்புல வேகுதுல்ல...

மூத்தவளுக்கு வரன் கேட்டு

தரகர் வந்தாரு
கொழுத்த சொத்துள்ள
எடமுன்னு சேதி சொன்னாரு
என்ன ஒண்ணு
ரெண்டாம்தாரமாத்தான்
வாக்கப்பட வேணுமுன்னாரு...

வறுமையும் அவ வயசும்

சரின்னு சொல்ல வைச்சிடுச்சு
சின்னவ வாங்கின மார்க்கு
தொள்ளாயிரத்து மூணு
'என்ன கல்லூரியில சேத்து விடு' ன்னு
பாடாப் படுத்துறா நின்னு...

ஒப்பனுக்கு குடிப்பழக்கம்

இப்ப இல்ல கண்ணு
எப்படி சொல்வேன்
வித்துக் குடிக்க ஒண்ணுமில்லேன்னு
நிப்பாட்டிட்டாகன்னு...

இது கேட்டு நீ ஒண்ணும்

வருத்தப்பட வேணாங்கன்ணு
லட்சியத்தில் நீ ஜெயிக்கணும்
நெலயாய் நின்னு
வெதநெல்ல வித்து பணம்
அனுப்பி வச்சிருக்கேன்
வாங்கி நீ வேளைக்கு சாப்புடு
தோதுபாத்து செலவு செஞ்சு
நாளக் கடத்திடு
தீர்ந்துபோனா கடுதாசி போடு
தாலிமணி வச்சிருக்கேன்
வித்தனுப்பறேன்...

தவறான எண்ணம் வேண்டாம்

தளராத தன்னம்பிக்கையால
நம் தலைமொறையின்
தலையெழுத்த மாத்தி எழுது!

செத்தேன்னு சேதி வந்தா

கொஞ்சம் அழுவு
பொறகு எல்லாமே சகசமுன்னு
மொகத்த கழுவு
வேல ஒண்ணு கெடச்சவுடனே
ஓடி வந்து ஏஞ் சமாதியில
சாஞ்சுபடு
அந்த சந்தோசச் சேதிய
என் காதுல சத்தம் போடு...

Tuesday, October 12, 2010

மனிதா ...!

 

மனிதா...
பாவம் செய்கிறாய் ..!
செய்த பாவத்திற்கு பரிகாரம்
உண்டியலா..?
செய்யப்போகும் பாவத்திற்கு பரிகாரம்
உண்டியலா ...?

உண்டியலில் பணம் போட்டால்

பாவம் தீருமா...?
சபித்தவர்களின்
சாபம்தான் மாறுமா...?

நீ ...போட்ட பணத்தால்

எத்தனை: சுவாமி"கள்
சுவீஸ் கணக்கு வைத்திருக்கிறது
உனக்குத் தெரியுமா...?

ஓசோன் படலத்தில்

ஓட்டை ....!
உண்டியல் போட்டாலும்
உயிர் வாழ முடியாது ...!
"மதத்தை அழிப்போம்
மரம் வளர்ப்போம் "
கோஷம் போடு ...!
குலமும் வாழும் ...
குலதெய்வமும் வாழும் ...!

பணத்தை ...

கோவிலில் போடாதே ...
கோவில் கட்டாதே ...!
மோதல்கள் போதும் ..!

குளம் வெட்டு ...

கும்பிடுகிறோம்...!
படிக்க பள்ளி கட்டு ...
பகுத்தறிவைக் கொடு ...
பாதம் தொடுகிறோம் ...!
நம்ம்பிக்கையை விதைத்து
தன்னம்ம்பிக்கை கொடு ...!
நாளைய சமுதையாமாவது
நலம் பெறட்டும் ...!

மரணம்



இமைப்போல்
இறுக்கிக்காத்த;
இறக்கையில் காத்த
அன்னையும் ஒரு நாள்!

குருதியை வியர்வையாக்கி
கடமையைப் போர்வையாக்கி
விழுதாய் இருந்து
கழுகாய் காவல் காத்த
தந்தையும் ஒரு நாள்!

அழுதால் அழுது
சிரித்தால் சிரித்து
கண்ணாடியாய் நம்
முன்னாடி தோன்றும்
மனைவியும் ஒரு நாள்!

தோல்கள் சுருங்கிக்
நரம்புகள் தோய்ந்து
நாமும் சாய்வோம்
ஒரு நாள்!

உச்சரிக்கும் போதே
உச்சந்தலைக் சிலிர்க்கும்;
எச்சரித்தாலும் நிச்சயம்
அது நடக்கும்!

தொண்டைக்குழியில்
சண்டைப்போடும்
சுவாசம்;
ஈரம் காத்த விழிகள்
தூரல் போடும்;
காதோடு சாரல் தூவும்!

சுற்றி நின்று
சொந்தங்கள்
சோகமயம் காட்டும்;
துடிக்கும் நம் உயிரோ
வெடிக்கக் காத்துக்கொண்டிருக்கும்
பறக்கக் காற்றுக் கொண்டிருக்கும்!

முதல் அழுகை ஆனந்தமானது
நாம் பிறக்கும்போது;
இறுதி அழுகை அழுத்தமானது
நாம் இறக்கும்போது!
 
பிரியும் போது
நிரந்திரமில்லா உலகத்தில்
நிலையாக ஏதேனும்
விட்டுச் செல்லும் நாம்!

நிலையான உலகத்திற்கு
குலையாத நன்மைகள்
குறையாத நன்மைகள்;
சுமந்துச் செல்வோம்;
சுவர்க்கம் செல்வோம்!

Monday, October 11, 2010

வெற்றி படிக்கட்டு ...!







வாழ்க்கை கடலில்
நீந்துகின்றேன் ....,
எனக்கு முன்னால்
யாருமில்லை ...!,
திரும்பி பார்த்தேன் ...
பின்னால் பலர்...!

முன்னாடி சென்றவர்கள்

முன்னேறி இருக்கலாம் ...
மூழ்கியும் இருக்கலாம் ...!
பின்னாடி வருபவர்களுக்கு
நான் முன்னாடிதான் ...!

முன்னாடி சென்றவர்கள்

எனக்கு உந்துதல்,
பின்னாடி வருபவர்கள்
எனக்கு ஆறுதல்...!

கோட்டான்களும் ,

புல்லுருவிகளும்
வாழும் இவ்வுலகில்,
படித்த பள்ளிப்பாடம்
தோற்றுத்தான் போய்விட்டது...!
அனுபவ வாழ்க்கையே
படிப்பாகிப்போனது...!
விடை தெரியா வினாவுக்கு
தேடலே ............
வாழ்க்கையாய்ப் போனது .

விடை தெரிந்தவர்களுக்கு

குழப்பம் கும்மியடித்தது ...!
சரியா... தவறாயென
கணிக்கும் முன்னே ,
காலம் கடந்து விடுகிறது ..
வாழ்வு முடிந்து விடுகிறது ...!

இளைஞனே ,

அனுபவங்களே ..வாழ்க்கை !
அனுபவங்களே படிப்பு ,
தேடு ..தேடு
தேடிக்கொண்டே இரு ...
தேடல்தான் வாழ்க்கை ..!
வெற்றி ..தோல்வி ..
எங்கும் ..எதிலும் உண்டு ,
தோல்வியை ,
ஈவு இரக்கமின்றி
கொன்று விடு ,.!
அதுதான்
வெற்றியின் 'முதற்படிக்கட்டு '

Friday, October 8, 2010

மடியினில் உறங்கும் வெண்ணிலவே!

 

 

மகளாகப் பிறந்த செண்பகமே, என்
மடியினில் உறங்கும் வெண்ணிலவே!
இன்னும் ஒரு ஜென்மத்திலும்
நீ எந்தன் மகளாக வருவாயா...?
இந்த ஆசை நிறைவேறினால்
அப்போது உன்
அம்மாவின் ஆசைகள்
என்னவாக இருக்கும்...?!

விடியலின் சோற்றுக்கு

வெஞ்சனம் வாங்கும்
காசைக்கூட என்
அழகுப் பெண் உனக்கு
அஞ்சனம் வாங்கிடச்
சேமித்து வைத்திருப்பேன்!

ஏழை வீட்டில்

பிறந்தாலென்ன..? என்
ஏஞ்சல் பெண் உனக்குத்
தாய்மடிதான் ஊஞ்சல்
சத்தியமாய்
நானேதான் உனது தாலாட்டு!

உன் பிஞ்சுக்கரங்களில் நானும்

என் அன்பின் பிடியில் நீயும்
ஆசை ஆசையாய்,
ஆனந்தமாய்
நித்தமும் நாம் உண்போம்
நிலாச்சோறு!

கண்ணீருக்கும்

கவலைக்கும்
இடமில்லாமல்,
கண்மணி நீயும் அம்மாவும்
கண்ணாமூச்சி ஆடலாம்
சந்தோசமாய்!

பள்ளிக்கூடம்

சென்று வரும்
பாசமுள்ள
மகளே உனக்காகப்
பலகாரம் செய்துவைத்து
மாலையில் நான் காத்திருப்பேன்!

பாட்டும் கதையும்

பாடமும் உனக்குப்
பாசத்தோடு நான்
சொல்லித்தருவேன்
வீட்டுக் கணக்கும்
சமையலும் கூட
விளையாட்டாக நான்
கற்றுத் தருவேன்!

சந்தோசம் என்றும் உன்

வாழ்வில் மலர
கண்ணீரோடு நான்
பிரார்த்தனை செய்வேன்
அவ்வப்போது ஒரு நாள் மட்டும்
சண்டையிட்டு உன்னோடு
கோபித்துக் கொள்வேன்!

பின்னொரு நாளில்,

சாவின் மடியில் நான்
சாய்ந்திருக்கும் வேளை
சந்தோசமாய் உன்
முகம் பார்த்துச்
சாந்தமாய்க் கண்மூடிப்போவேன்!

வருந்தாதே என் அன்புச் செல்லமே !

எத்தனை ஜென்மங்கள்
வந்தாலும் போனாலும்
இப்போதும் எப்போதும்
நீ மட்டும்தான் எனது பிள்ளை;
இறைவன் எனக்கு
வரமாகத் தந்த
எனது அன்பான தொல்லை!

Tuesday, October 5, 2010

சுமைதாங்கி







நரைத்த தலையில்
பழுத்த நினைவுகள்

பணிந்த உடலில்

பற்றிநிற்கும் ஊன்றுகோல்

சுருங்கிவிட்ட தசைகள்

தொலைந்துபோன பார்வை

தளர்ந்த குரல்

தள்ளாடும் நடை

சின்னக்குழந்தை போல

பேரக்குழந்தைகளுடன்

கொஞ்சிவிளையாடும்

சுமைதாங்கிகள் ஒவ்வொரு
குடும்பத்திலும்,

நலம்பேனவேண்டும்

அவர்கள் மனம்நோகவேண்டாம்

நாளைய சுமைதாங்கி நாம்

என மனதில் நிறுத்தினால்

முதியோர் இல்லம்

இல்லாமை செய்யலாம்

Monday, October 4, 2010

வறுமை சிறுவன்....





ஒரு புழுதி காட்டோடு
ஓடி விளையாடிய நட்பு..

உச்ச்ந்தலையில் விடியலை தூக்கி

உழவுக்கு விழித்தெழுந்த ஜீவன்...

காம்ப்ளான், கெல்லாக்ஸ் நிரப்பாதது,

கஞ்சி குடித்தே விறைப்பேறிய உடம்பு....

மதிய உணவோடு சேர்த்து

மனதையும் கொள்ளையடித்த அரசு பள்ளி....

காசு கொடுத்து கற்க முடியாதது,

கால் அரை வீசை என்று,
காய்கறி விற்றதில் தெரிந்தது கணக்கு...

இப்படியே பழகிப்போனது மனது..

நீர், நிலம், காற்று, வானம், நெருப்பு, பறப்பன, ஊர்வன,
நடப்பன, மிதப்பன...
இப்படியே
வாழ்க்கையின் ஒவ்வொரு வரிகளாக,
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்..

இருப்பவர்கள்,

வாழ்க்கையின் பக்கங்களை
விலை கொடுத்து வாங்கியும்,
கற்றுக்கொண்டே.....
இன்னமும் கற்றுகொண்டே....