Saturday, March 19, 2011

அழும் வயிறு..

 
 
அழுக்கு ஆடையும்;
வறட்சிச் சிகையும்;
ஏழ்மைக்கு
உரிமையாளனாய்
ஏழை என்றப் பெயருடன்!

அழும் வயிறுக்கு
ஆதரவாய்
விழிகள் விசும்ப;
குடலில் உலைக் கொதிக்க;
பாதம் இரண்டும்
படுக்கையைத் தேடும்!

எச்சம் கொண்ட
மிச்ச உணவை
வீசுவதற்கு முன்;
வீதியில் பாருங்கள்;
வக்கற்று வயிற்றில்
பசி சுமந்து;
என்னைப்போல
எவருமுண்டா என்று!

Friday, January 28, 2011

வெளிநாட்டு வேலை

 
 
பழைய நினைவுகள்
தூசுப்படிந்துக்;
காசுக்காக தேசம் கடந்துப்;
பள்ளி நண்பர்களும்;
கல்லூரி தோழர்களும்;
அலைவரிசையில்
அலையடிக்கும்;
எப்போதாவது
உள்ளத்திற்கு மகிழ்ச்சியாய்
குளிர் அடிக்கும்!

வெயிலும் பனியும்
நம் சருமத்திடம்
சரணடைந்து;
பெற்றோரின் விரலுக்கு
நம் காதுச் சமர்ப்பணமாய்;
திருகி விளையாட!

குளியலுக்காக
வாய்க்காலையும்;
வரப்புகளையும்
வலைவீசித் தேடி;
ஓடியப் பாதங்கள்;
ஓய்வாக இன்று!

என் வியர்வைகள்
குளிர்சாதனப்பெட்டிற்கு
வெட்கப்பட்டு;
மேனியில்
மறைந்துப்போய்;
வியர்வை என்பதே
மறந்துப்போய்!

கணிணிக்குக் கண்கள்
அர்ப்பணமாய்;
உடல்கள் சுற்றும்
நாற்காலிக்கு
மெத்தனமாய்!

உறவுகள்
கடலுக்கு அப்பால்;
மாதா மாதம்
பணம் மட்டும்
பயணம் செல்லும்;

Tuesday, January 11, 2011

என்ன செய்யப் போகிறாய்? !....





மெளனத்தின் வியாபிப்பால்
கனவுகளற்ற எனது பிரபஞ்சம்
சலனமற்றுக் கிடந்தது

தூரத்தில் யாருடைய

வீட்டின் கதவோ
இழுத்துச் சாத்தும் சத்தமும்
கரையும் காக்கையின் சத்தமும்
என்னை....
அரைத் தூக்கத்தில் கிடத்தியது

கூரை வழியே

கசிந்தொழுகும் சூரியன்
தலையணையோரம் தகித்துக்
கன்னங்களைச் சுட்டுக் கொண்டிருந்தது

உச்சி வெயிலின் உஷ்ணம்

பிடரிகளில் வியர்வையாகத் துளிர்த்து
ஊறும் உணர்வாக
வழிந்தோடியதால் - குத்த வைத்து
உட்கார்ந்து கொண்டேன்

எதிர்காலம் சூன்யமாக

ஓர் ஒற்றைக்கேள்வி கேட்டது
என்ன செய்யப் போகிறாய்?.....

Tuesday, December 14, 2010

ஜப்பானின் ஜனனம்..!

 

கடல் கடந்து,
காற்றைக் கிழித்தும்
காணவரும் மக்கள்
நெஞ்சினைக்
கைத்தட்டவைத்த
ஜப்பானே..
உன் வளர்ச்சிக்கு
தலை வணங்குகிறேன்.....!

உன்னைப் பெற்றெடுத்து

பெயர் சூட்டிய தாய்
யார் என்பதைக் கூறு,
நானும் சோதனைக்குழாய்
மூலம் ஒரு சாதனை
இந்தியாவை
உருவாக்க விழைகிறேன்....

இரண்டாம் உலகப்போர்

உன் சாதனைக்கு
வித்திட்ட சோதனை
விதை என்பேன்.......

அன்று ,

அமெரிக்கர்கள் போட்ட
அணுகுண்டால் உன் நாடு
சிதைவுண்டது.......

அக்குண்டு ,

ஆக்சிஜனைக்கூட
உன் நாட்டிற்குள்
அனுமதிக்க மறுத்ததாம் ,
ஆப்ரிக்கரை, அமெரிக்கர்கள்
வாட்டியதைப்போல .......

புல்பூண்டு கூட

புதிதாய்த் தோன்ற
அஞ்சியது...
பிறந்தவுடன்
இறந்துவிடுவோமோ
என்ற பயத்தில்......

ஆயரம் சன்னல்கள்

திறந்திருந்தும்
அலுப்பின்றி
அடிக்கும்
வெப்பக்காற்றால்,
உன் நாட்டின்
இயற்கை எழிலுடன்
உன் நாட்டினர்
மூக்குமா தேய்ந்து
போனது???

உன் உடல் வாகு குன்றினும்,

உள்ள வாகு குன்றாமல்
நிலைநாட்டுகின்றது,
உன் புகழை......

அகிலமே அண்ணார்ந்து

பார்க்கும் அதிசயங்களை
அளிக்கிறாய் ....

உன் நாட்டின் மைந்தர்கள்

அனைவரும் கண்டுபிடிப்பின்
கலையாத கருவூலங்கள்.....

உன் நாட்டின் ஓரத்தில்

முளையாத நாற்று
உன் மனதின்
வீரத்தில் முளைந்து
நிற்கிறது......

விரைவில் விவசாயத்தை

துவங்கு...
இந்த அகிலமே
காத்திருக்கின்றது....
உன் திறமையை
அறுவடை செய்ய .........!!!

Sunday, December 12, 2010

எங்கள் கூடு..

 
 
அடுக்குப் படுக்கையைக் கொண்ட
அடுக்கு மாடிக் கட்டிடங்களில்
வாழும் சிறுவண்டுகள்!

மூட்டைப் பூச்சியும்;
முகச் சுளிப்பும்;
வந்துப்போகும் எங்கள்
வசந்த மாளிகைக்கு!

படித்தவரும்;படிக்காதவரும்;
படுப்பதால்;
சமச்சீர் கொள்கைகள்
சாரல் வீசும்!
 
சமைப்பதும்;குளிப்பதும்;
அட்டவணையில் தொங்க;
ஊர்ச் சாமான்கள்
படுக்கைக்குக் கீழே
பதுங்கிக்கிடக்க;
காலணிகள் ஒரத்தில்
ஒதுங்கிக் கிடக்க;
கனமான இதயத்துடன்
கவனமாக உழைக்க
வந்தத் தேசத்தில்;
நாங்கள் ஓய்வெடுக்கும் இடம்!

Friday, November 19, 2010

அன்பிற்கு உயிர் கொடுத்தவளே!!!...


*
எத்தனை கடவுளிடம்
எனக்காக வேண்டியிருப்பாய்!
எத்தனை மணித்துளிகள்
எனக்காக காத்திருந்தாய்!
எத்தனை இரவுகள்
என் வரவுக்காக விழித்திருந்தாய்!
எத்தனை ஆண்டுகள்
இரவில் விழிக்காமல் நானிருக்க
விழித்து கொண்டு நீ இருந்தாய்!
*
கருவறையில் இருக்கும்
கல்லைவிட,கள்ளகபடமில்லாத,
கருவறையில் சுமந்தவளே,
கடவுள் என்பதை நீ உணர்த்தினாய்!
*
என் வலிக்காக நான் அழுதேன்.
வளர்த்தவளுக்காக நான் அழுததில்லை...
காரணம் தெரியாமல் என்னோடு நீ அழுதாய்!
*
இதயத்தை உதைத்தவளுக்காக
வலியால் நான் அழுதேன்...
காரணம் ஏதும் கேட்காமல் அப்போதும்
என்னுடன் நீ அழுதாய்!
*
அன்பு ஒன்றே உலகில்
சிறந்தது என்பதை தெரியவைத்தாய்!
அன்புதான் அழுகையாக
வெளிப்படுகின்றது என்பதை புரியவைத்தாய்!
அன்பே அன்னை!அன்புதான் உலகம்
என்பதை உணர்த்தினாய்!
*
கருவறையில் இருந்தபோது
கரு என்று பாராமல்,
உன் உயிரை பற்றி நினைக்காமல்
கருவிற்கு ஓர் உயிர் கொடுத்தாய்!
*
மழலையாக தவழ்ந்தபோது
இரத்தம் என பாராமல்,
என் கண்ணீரை துடைக்க
இரத்தத்தை பாலாக மாற்றி,
எனை மகிழச்செயதாய்!
*
மனிதனாக வளர்ந்தபோது
சோகம் தெரியாமல் நான் வாழ,
சுகமாக நான் இருக்க,
நலமுடன் நான் வாழ,
எனக்காக என்று நான் இருந்தபோது
தனக்காக என்று நீ இல்லாமல்,
இரத்தத்தை உருக்கி
வியர்வை சிந்தினாய்!
*
அன்றும் எனக்காக
கண்ணீர் வடித்தாய்!
இன்றும் எனக்காக
கண்ணீர் வடிக்கின்றாய்!
*
இதுவரை செய்த தவறுகளுக்காக
தலை வணங்குகின்றேன்!
வாழ்க்கையை தொலைக்க
நான் விரும்பவில்லை...
இதோ!கடவுளாக
உனை வணங்குகின்றேன்!
*
கடல் தாண்டி
பயணம் செய்ய விருப்பமில்லை.
நீயே!எந்தன்
அசையா சொத்தாக இருக்கும்போது!
காற்றை
சுவாசிக்க விருப்பமில்லை...
நீயே!எந்தன்
மூச்சாக இருக்கும்போது!
ஒலியினை கூட
கேட்க விருப்பமில்லை....
நீயே!எந்தன்
செவியாக இருக்கும்போது!
*
அத்தனையும்,
இத்தனையும்,
இத்தனை நாட்கள்
நான் இழந்ததுபோதும்...
இனி,அன்பை மட்டும் என்றும்
நான் இழக்க விரும்பவில்லை...
*
தாயே!உனையே!
என் இதயத்தில் நேசிக்கிறேன்!
உன்னை மட்டுமே
உயிரின் மூச்சாக சுவாசிக்கிறேன்!
*
இனி,எனக்கு
ஒரு பிறப்பு என்றால்,
அது உன் கருவறையாக
மட்டும்தான் இருக்க வேண்டும்.
எனக்கு இறப்பு என்றால்,
அதுவும் உன் மடியாக
மட்டுதான் இருக்க வேண்டும்....
*
இனி,உனக்கு
ஒரு பிறப்பு என்றால்,
எனக்கு மகளாக
மட்டும்தான் நீ பிறக்க வேண்டும்...
மகளாக பிறந்து,
தாயாக இருந்து,
எனை நீ
வளர்க்க வேண்டும்.....
*
கடவுள்
என்பவன்
ஒருவன் இருந்தால்,
இதனையேற்று
எனக்காக
செவி சாய்க்க வேண்டும்....
*
அன்பே கடவுள்!
அன்பை தரும்
அன்னை மட்டுமே கடவுள்!
தாயே!நீ வாழ்க!
அன்பிற்கு உயிர் கொடுத்தவளே!!!
பல்லாயிரகணக்காண்டுகள் நீ வாழ்க!
*

Monday, November 15, 2010

சொந்தங்களுடன்தானே கொண்டாடினீர்கள்!!!???


சிந்திய சோற்றுப் பருக்கைகளை
கொத்தும் புறாக்கள் வீட்டின் முன்
வருவதே இல்லை!

இலையுதிர் காலங்கள்

என்பது செய்தியாய்
கேட்டால்தான் தெரிகிறது!

மாலையை நினைவுப் படுத்தும்

மல்லிகை எல்லாம்
மாற்றான் தோட்டத்திலும் இல்லை!

அந்த ஜன்னல் ஓர

சாரல்களை எல்லாம்
கண்ணாடி போட்டு மூடிவிட்டனர்!

இப்பொழுதெல்லாம் செல்லப் பிராணிகள்

பிளாஸ்டிக் பொம்மைகள்
என்றாகிவிட்டது!

மரத்தடி சாமிகள் கூட

சாலையின் ஓரமாய்
நகர்ந்துவிட்டனர்!

குழந்தைகள் எல்லாம்

திடலுக்கு பதில்
வீடியோ கேமில் அமர்ந்துவிட்டனர்!

விறகு அடுப்பு ஊதியவர்கள் கூட

பஞ்சு வைத்து புகைக்க
ஆரம்பித்து விட்டனர்!

கொக்குகளும் நாரைகளும்

வட்டமிட ஆழ்குழாய்
கிணறுகளையாவது தேடுகின்றன!

அரிசி கோலங்கள்

சுண்ணாம்பாகி சாயப் பூச்சாகி
கட்டெறும்புகளாகிவிட்டன!

என்ன செய்வது

இந்த தின மழையில்
முளைக்கும் அபூர்வ காளான்களை!

இதைத்தானே செய்தீர்கள்???

இந்த தீபாவளியையாவது விட்டுப்போன
சொந்தங்களுடன்தானே கொண்டாடினீர்கள்!!!???